×

வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர்ந்து 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம்: விவசாய அமைச்சருடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் போராட்டம் பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை பற்றி மேற்கொண்டு உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி எல்லை, பஞ்சாப், அரியானா மாநில எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கியிருந்தது.  எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் 500க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன.  ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.  

பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறினார். அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜே.பி.நட்டா இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Delhi ,Agriculture Minister ,Amit Shah , Agricultural Law, Delhi, Farmers, Struggle, Amitsha Advice
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!