×

சேலத்தில் இன்று முதல் அமல்: சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உடனடி அபராதம்

சேலம்: சேலத்தில் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க சேலம் 5 ரோடு ஈரடுக்கு மேம்பாலம் அருகே 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் இன்னும் 50 சதவீதம் சாலைகள் ஆக்ரமிப்பால் குறுகி காணப்படுகிறது. இதுபோன்ற சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வாகன பெருக்கத்திற்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வாகன விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களில் 20 முதல் 50 பேர் உயிரிழக்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகிறது. இதுபோன்ற விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதே கூறப்படுகிறது. வாகனங்கள் ஓட்டுபவர்கள் பலர் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.

விபத்துக்களை தவிர்க்க சேலத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், சேலம் 5 ரோடு சாலை சந்திப்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஏ.என்.பி.ஆர்., கேமரா பொருத்தப்பட்டு சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாலை சந்திப்பில் தரைத்தள சாலை, முதல்தள சாலை, இரண்டாவது தள சாலை என 3 அடுக்குகளிலும் உள்ள 12 சாலைகளை கண்காணிக்கும் வகையில் 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளது. சாலையில் வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்கிறார்களா? இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்கிறார்களா? சாலையில் உள்ள எல்லைக்கோட்டை தாண்டாமல் நிற்கிறாரா? உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிகளை மீறாமல் பயணம் செய்வது கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும், சாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை கேமராக்கள் துல்லியமாக போட்டோவாக பதிவு செய்து, காவல்துறை கண்காணிப்பு அறை, டெல்லி தேசிய தகவல் மையம் ஆகியவற்றில் தானியங்கி முறையில் பதிவாகிவிடும். அத்துடன் வாகன பதிவு எண்ணை கொண்டு அவரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு, விதிமீறலுக்கான அபராதத்தொகைக்கான சலான் வந்து சேர்ந்துவிடும். அபராத தொகை தொடர்பான விபரம் வட்டார போக்குவரத்து அலுவலக கம்ப்யூட்டரிலும் பதிவாகிவிடும்.

விதிமீறல் ஈடுபட்டவர்கள், அபராதத்தொகையை செலுத்தாமல் இருந்தால், கூடுதலாக கொண்டே வரும். மேலும் விதிமீறும் வாகனத்தை விற்பனை செய்யும்போது, அபராதத்தொகை முழுவதும் செலுத்திய பின்னரே வாகன விற்பனை பதிவு மேற்கொள்ள முடியும். இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விதிமுறை இன்று (1ம்தேதி) தேதி முதல் ஏ.என்.பி.ஆர்., கேமரா நடைமுறைக்கு வருவதால், சேலத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், இனி கட்டாயம் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

இது குறித்து சேலம் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கூறியதாவது: சேலம் மாநகர பகுதியில் சாலை விதிமுறைகளை கண்காணிக்க முதல் கட்டமாக 5 ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தில் 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாடு மையம் டெல்லி தகவல் மையத்திலும், சேலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, சிக்னல் மதிக்காமல் வாகனம் இயக்குவது, எல்லை கோட்டை தாண்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, சீட்பெல்ட் அணியாததது உள்பட விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு மாதமாக இந்த கேமராக்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் சாலையில் விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அவரது செல்போனுக்கு அபராத்தொகைக்கான சலான் சென்றுவிடும். வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அபராதத்தொகை கட்டியே தீரவேண்டும். முதல் கட்டமாக 5 ரோடு பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைப்படிப்படியாக கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட், சுந்தர்லாட்ஜ், அஸ்தம்பட்டி, ஏவிஆர் ரவுண்டானா உள்பட பல முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Salem , Penalty
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...