×

குமரியில் தூர்வாரப்படாத 1400 குளங்கள்: விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் 4500 குளங்கள் உள்ளன. இதில் 2050 குளங்கள் தூர்வார தகுதியானவை என்று கடந்த 2017ல் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் குளத்தை தூர்வார விருப்பம் உள்ளவர்கள் மனு கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டது. விவசாய அமைப்புகள், தனி நபர்கள் என்று பலரும் அனுமதி பெற்று குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். 50 சென்ட், ஒரு ஏக்கர் கொண்டது என்று 250 பரப்பளவில் சிறிய குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டது. மேலும் 100 குளங்கள் பகுதியளவு வாரப்பட்டது. 350 குளங்களில் சிறிது சிறிதாக தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதுவரை குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றபோதிலும்  1400 குளங்களுக்கு மனுக்களே வரவில்லை.

அப்போது குளங்களில் பரவலாக மண் எடுக்கப்பட்டதால் மண் தேவை குறைந்தது, ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள குளங்கள், தண்ணீர் நிரம்பிய நிலையில் காட்சியளித்த குளங்கள், போதிய பாதை வசதி இல்லாத நிலையில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு சுமார் 1400 குளங்கள் தூர்வாரப்பட வேண்டிய நிலையில் தயாராக உள்ளது. இதனை போன்று உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருகின்ற குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். குமரி மாவட்டத்தில் பேரூராட்சி, ஊராட்சி கட்டுப்பாட்டில் மட்டும் 800 குளங்கள் உள்ளன. ஏற்கனவே தூர்வாரும் பணிகள் நடைபெற்ற போது உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள குளங்கள் விபரம் அரசிதழில் வெளியிடப்பட வில்லை. எனவே வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுபட்ட குளங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள குளங்களின் விபரங்களையும் அரசிதழில் வெளியிட்டால்தான் அவற்றை தூர்வார முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெறும் மாவட்டமாக உள்ளது. மழைக்காலங்களில் கிடைக்கின்ற மழைநீரை குளங்களில் சேமித்து வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் செழிப்பாக நடைபெறும். ஆனால் குளங்கள் தூர்வாரப்படாமல் மண் நிரம்பி காணப்படுவதால் மழைக்காலங்களில் நீர் வழிந்தோடி விவசாய விளை நிலங்களிலும், குடியிருப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட பாசன குளங்கள் ஆக்ரமிப்புகளின் பிடியில் சிக்கியுள்ளன. ஆக்ரமிப்பாளர்கள் குளங்களில் தண்ணீர் தேக்க இயலாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாகுபடியும் தடைபடுகிறது.

குமரி மாவட்ட கனிமவளத்துறை கடந்த காலங்களில் சம்பந்தம் இல்லாத வழக்கை காரணம் காட்டி குளங்கள் தூர்வாருவதில் அனுமதி வழங்குவதில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் குளங்கள் தூர்வாரும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தவறான சட்ட ஆலோசனையை கனிமவளத்துறை வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இருப்பினும் குமரி மாவட்ட கலெக்டர் இதற்காக சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் அறிவிப்பை வெளியிட்டார். மாவட்டத்தில் கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு தாலுகாக்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் குளங்கள் தூர்வாருவது தொடர்பாக விண்ணப்பித்தது நிலுவையில் உள்ளது. மேலும் அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் விவசாயிகள் நிலுவையில் உள்ளது. அந்த வகையில் மொத்தம் 400 மனுக்கள் உள்ளது.

மேலும் தாசில்தார்கள் உத்தரவு போட்டாலும் பாஸ் வழங்க வேண்டியது பொதுப்பணித்துறை ஆகும். ஆனால் பொதுப்பணித்துறையிடம் நிலுவையில் 200 மனுக்கள் உள்ளன. இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

இது தொடர்பாக குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் தண்ணீர் இருக்கின்ற குளங்களை தவிர பிற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும். தற்போது மண் தேவை உள்ளதாலும், மண் எடுக்க அனுமதி வழங்கப்படாததாலும் செங்கல்சூளை நடத்துகின்றவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குளத்து மண்ணை அவர்களுக்கு அளித்தால் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை ஏற்படலாம். எனவே குளங்களை தூர்வாரும் நடவடிக்கைகளை விவசாயிகள் தொடங்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கனிமவளத்துறை, வருவாய்துறை இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Kumari , Farmers
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து