×

ஈரோடு மாவட்டத்தில் 7 தடுப்பணைகளில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் செக்கானூர், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் மின் கதவணைகள் கட்டப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஒவ்வொரு கதவணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்திரங்கள் அமைக்கப்பட்டு தினமும் அதிகபட்சமாக மணிக்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, தற்போது குடிநீருக்கு மட்டுமே வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு ஆற்றில் வரும் குறைந்த அளவு தண்ணீரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கதவணைகளில் மின் உற்பத்திக்காக தேக்கி வைக்கப்படும்போது, டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக செல்லும் தண்ணீரின் அளவு தடைபடும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, 7 கதவணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மட்டும் ஒரு மதகில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு: காவிரி ஆற்றில் உள்ள 7 தடுப்பணைகளிலும் ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் ஆகாயதாமரைகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. இதில், ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் குடிநீருக்காக திறந்து விடப்படும் மதகில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதால், நீரோட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பணைகளில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district ,Erode , Power generation
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...