×

அதீத கனமழைக்கு வாய்ப்பு: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

நெல்லை: வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 4ம் தேதி வரை நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புகள் உள்ளன. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தென்மேற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இம்மண்டலம் வடக்கு, வடமேற்கு பகுதியில் நகர்ந்து வரத் தொடங்கியுள்ளது. நாளை (டிச.2ம் தேதி) இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறவுள்ளது. நாகை அருகே கடலோர பகுதியை அடைந்து மன்னார் வளைகுடா வழியாக இப்புயல் நெல்லை மாவட்டத்தை ஒட்டி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களை வலுவான புயலோ, பெருமழையோ தாக்கியதில்லை. தென் தமிழக கடற்பகுதிக்கு நேர் எதிரில் காணப்படும் இலங்கை தீவு காரணமாக பெரும்பாலும் புயல்களும், மழை வெள்ளமும் நெல்லை மாவட்டத்தை தாக்குவதில்லை. வங்கக் கடலின் சீற்றமும் நெல்லை, தூத்துக்குடியின் கடலோரங்களை அதிகம் அண்டியதில்லை. நெல்லைக்கு மேற்கே பொதிகை மலையும் மாவட்டத்தை அரணாக காத்து வருகிறது. சுனாமி பேரலைகள் தாக்கியபோதும், ஓகி புயல் கோர தாண்டவம் ஆடியபோதும் நெல்லை மாவட்டம் தன்னை சுற்றியுள்ள அரண்களால் தற்காத்துக் கொண்டது. இந்நிலையில் நாளை தொடங்கி வீசவுள்ள ‘புரேவி’ புயல் நெல்லை மாவட்டத்தை தொட்டு செல்வதால், புயலின் தாக்கமும், மழையின் தாக்கமும் எப்படியிருக்கும் என்ற கேள்வி எல்லோருக்குமே உள்ளது. கனமழைக்கு வாய்புள்ளது என வானிலை மையம் அறிவித்து விட்ட சூழலில், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் இப்போதிருந்தே மேற்கொள்ள தொடங்கி விட்டன.

கடந்த 1992ம் ஆண்டு நெல்லையில் பெய்த கனமழையில், நெல்லை, தூத்துக்குடி இரு மாவட்டங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், மாவட்ட அறிவியல் மையம் மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. விகேபுரத்தில் வெள்ளத்தில் மூழ்கி பலர் பலியாயினர். இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மேக்கரையில் பெரியளவு பாதிப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகர் மட்டுமின்றி, புறநகர பகுதிகளிலும் பல்வேறு நீர்நிலைகளை ஆக்கிரமித்து தற்போது கட்டிடங்கள் உருவாகியிருப்பதால், தொடர்ச்சியான கனமழை இருந்தால், குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக குளங்கள் பராமரிப்பற்று இருப்பதால், தண்ணீர் நிரம்பினால் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து நீர்நிலைகளையும் கணக்கிட்டு, அவற்றின் கொள்ளளவு, தண்ணீர் வெளியேற செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை பொதுப்பணித்துறை நேற்று முதல் கணக்கிட்டு வருகிறது.

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களும், தாழ்வான பகுதியில் வசிப்போரும் பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயர கேட்டுக் கொண்டுள்ளது. பழமையான இடிந்து விழும் கட்டிடங்களில் வசிப்போர் அக்கட்டிடங்களில் இருந்து வெளியேறிட உத்தரவிடப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிரம்பும் தருவாயில் உள்ள குளங்கள் அனைத்தும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும் அறிவிப்புகளுக்கு ஏற்ப பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியேறக் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மீனவர்கள் பாதுகாப்புக்காக ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் பல்நோக்கு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிமித்தம் பொதுமக்கள் தங்கிட வசதியாக மாவட்டம் முழுவதும் தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு தனியார் மண்டபங்களிலும் பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

17 பேரை ஜலசமாதியாக்கிய 1992ம் ஆண்டு வெள்ளம்

வி.கே.புரம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. 13ம் தேதி பாபநாசம் அணைப்பகுதியில் 310 மிமீ மழையும், சேர்வலாறு அணைப்பகுதியில் 210மிமீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 190 மிமீ மழையும், வி.கே.புரம் பகுதியில் 321 மிமீ மழையும் பெய்தது. இதனால் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை நிரம்பியது. இதன் காரணமாக நவம்பர் 13ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் பாபநாசம், மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து நிமிடத்திற்கு லட்சக்கணக்கான கன அடிநீர் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சில நிமிடங்களில் முண்டந்துறை ஆற்றுப்பாலத்தை அடைந்தது. வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முண்டந்துறை ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது. வெள்ளப் பெருக்கில் பெரிய மரங்கள் வேரோடு ஆற்றில் அடித்து வரப்பட்டன.
 
வி.கே.புரம் மேலக்கொட்டாரம் பகுதியில் மதுரா கோட்ஸ் ஆலைக்கு தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்காக தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நூறு ஆண்டுகள் ஆன பழமையான இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்ததால் அதன் அருகே புதிய சிமென்ட் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. வெள்ள பெருக்கில் அடித்து வரப்பட்ட மரங்கள் புதிய பாலத்தின் தூண்களில் சிக்கியது. இதனால் வெள்ளம் முழுவதும் ஆற்றில் செல்லாமல் பல ஆயிரம் கன அடிநீர் அருகிலுள்ள வயல் பகுதியில் பாய்ந்து ஓடியது. வயல் அருகில் கட்டப்பட்டிருந்த திருவள்ளுவர் நகர் பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இரவில் கதவை மூடி தூங்கிக் கொண்டிருந்த 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே இறந்தனர்.

மேலக்கொட்டாரம் ஊருக்குள்ளும் வெள்ளம் வர சூழ்ந்தது. இதனால் அங்குள்ளவர்கள் உடனடியாக குழந்தைகளுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ள புயலால் வருவதை தடுக்க போதுமான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 143 அடி கொள்ளாவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் 126 அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 125.62 அடியாகவும் உள்ளது. இதனால் அணைகள் விரைவில் நிரம்பும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கன மழை பெய்தால் அணைகள் நிரம்பி வழியும் பட்சத்தில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் 1992ல் ஏற்பட்ட நிலை ஏற்படும் முன் அரசு விழித்தெழுந்து தற்போதே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Tags : Nellai ,districts ,Thoothukudi ,Tenkasi , Heavy rain
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16...