தனியார் வங்கி கேஷியரிடம் துணிகர திருட்டு: சிக்கிய ஆட்டோ டிரைவர் மனைவி சிறையிலடைப்பு

திருச்சி: திருச்சியில் தனியார் வங்கி கேஷியரிடம் ரூ.74 ஆயிரத்தை துணிகரமாக திருடிய ஆட்டோ டிரைவரின் மனைவி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் பல்வேறு இடங்களில் தொடர் கைவரிசை காட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருச்சி எ.புதூர் ராமச்சந்திரா நகரில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 10ம் தேதி பெண் கேஷியர் கீழே அமர்ந்து அன்றைய தினம் பொதுமக்கள் செலுத்திய பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரிடம் வந்த ஒரு பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் சென்ற சிறிது நேரத்தில் பணத்தை எண்ணி பார்த்தபோது ரூ.74 ஆயிரம் குறைவாக இருந்ததை பாரத்து கேஷியர் பதறினார். எங்கு தேடியும் பணத்தை காணவில்லை. இது குறித்து எ.புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கேஷியரின் அருகே நின்று பேசும் பெண் நைசாக மேஜை டிராயரில் இருந்து ரூ.74 ஆயிரத்தை அபேஸ் செய்து பேக்கில் வைத்து செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், பணத்தை அபேஸ் செய்த பெண் திருச்சி உய்யகொண்டான்திருமலை அடுத்த நாச்சிக்குறிச்சி வாசன் வேலியை சேர்ந்த ராஜ்மோகன் மனைவி செல்வி(42) என்பது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக் தகவல் கிடைத்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஆட்டோ டிரைவரான கணவர் ராஜ்மோகன், மனைவி செல்வியை பிரிந்து கரூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. 2வது மகள் எம்எஸ்சி சைக்காலஜி படித்துள்ளார். மகன் தனியார் நிதிநிறுவனத்தில் பணியில் உள்ளார். இதில் குடும்பத்துடன் எ.புதூர் அன்பு நகரில் குடியிருந்தபோது இதுபோன்ற சிறு, சிறு திருட்டில் ஈடுபடும் செல்வி, சிக்கும்போது குடும்ப பின்னணியை வைத்து தப்பியுள்ளார். இதுபோல் கடந்த 7 ஆண்டுக்கு முன்பாக காவல்துறை அதிகாரியின் மனைவியிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ் செய்துள்ளார். பெரிய கடைவீதியில் உள்ள நகைக்கடையில் 1 கிராம் மோதிரம் அணிந்து கொண்டு நகை எடுப்பது போல் மாற்றி வைத்து அதிக எடை கொண்ட நகைகளை அபேஸ் செய்து வருவார். இதுபோல் மற்றொரு முறை சென்ற போது சிக்கிக்கொண்டார். அப்போதும் குடும்ப பின்னணியில் வெளியே வந்துவிட்டார். தற்போது வசமாக சிக்கிக்கொண்டதை அடுத்து வழக்குப்பதிந்த எ.புதூர் இன்ஸபெக்டர் நிக்சன், கைதான செல்வியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories:

>