‘டெல்லி சலோ’ விவசாயிகளுக்கு ஆதரவு: வாரிய தலைவர் பதவியை உதறிய பா.ஜ ஆதரவு எம்எல்ஏ: முதல்வர் கட்டார் அதிர்ச்சி

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் பதவியை பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ உதறி இருப்பது அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

விவசாய சட்ட திருத்த மசோதாக்கள் மூன்றையும் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து வடமாநில விவசாயிகள் லட்சக்கணக்கில் டெல்லி எல்லைகளில் குவிந்துள்ளனர். திட்டமிட்ட 3ம் தேதிக்கு முன்பாகவே பேச்சுவார்த்தைகு அழைப்பு விடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை, அவரது நிபந்தனை ஏற்க முடியாதது என மறுப்பு தெரிவித்த விவசாயிகள், டெல்லிக்குள் நுழைந்து கண்டிப்பாக போராடுவோம், மசோதாக்களை வாபஸ் பெறும் வரை தலைநகரில் இருந்து திரும்ப மாட்டோம் என தீர்த்து கூறியிருப்பது மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அரியானா விவசாயிகளில் ஒருவர் கூட போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் விவசாயிகள் தான் தடைகளை மீறி அரியானா வழியாக டெல்லியை முற்றுகையிட செல்கின்றனர் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தார்.

பதில் தாக்குதல் கொடுத்து பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறுகையில், ‘‘இரண்டு மாதமாக அமைதியாக மாநிலத்தில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை டெல்லி செல்ல விடாமல் தடைகள் அமைத்தும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைக்க முயற்சிப்பது நியாயமா’’, என கட்டாருக்கு காட்டம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், போராட்டத்துக்காக டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகளை ஆதரித்து பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சோம்பிர் சங்க்வான், கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முதல்வர் கட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு சங்க்வான் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘விவசாயிகளுக்கு ஆதரவாக கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அனைத்து மாநில விவசாயிகளைப் போலவே, எனது தாத்ரி தொகுதி விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில் அவர்களுக்கு எனது முழு ஆதரவை அளிப்பதையே முன்னுரிமையாக கருதுகிறேன். அதுதான் நியாயமானதும் ஆகும். எனவே உள்ளார்ந்த திருப்தியுடன் கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’, எனக் கூறியுள்ளார்.

மாநிலத்தில் ஒரு விவசாயி கூட போராட்டத்தை ஆதரிக்கவில்லை எனக் கூறிய முதல்வர் கட்டாருக்கு, தாத்ரி தொகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர், அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தார்மீக கடமை என அவரது கூட்டணியை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ கூறியிருப்பது முதல்வருக்கு இக்கட்டு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: