மெட்ரோவில் மயங்கிய பயணி உயிரை காப்பாற்றிய வீரர்

புதுடெல்லி: மெட்ரோ ரயிலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஸ்டேஷனில் இறக்கப்பட்டதும் மயங்கி சரிந்த பயணியை உயிர் காக்கும் அத்தியாவசிய அவசர சிகிச்சை அளித்து காப்பாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரரை பயணிகள் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். ஹுடா சிட்டி சென்டர் நோக்கி விரைந்த மெட்ரோ ரயிலில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பரத் பூஷண்(50) என்பவர் தனது மகளுடன் நேற்று பயணம் செய்தார். பூஷணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவசர உதவி எண்ணில் ரயில் டிரைவரை தொடர்பு கொண்டு தந்தை நிலை குறித்து மகள் கவலை தெரிவித்து, உடனடி உதவி கோரினார். அடுத்து வரவுள்ள கிட்டர்னி மெட்ரோ ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்த டிரைவர், நோயாளியை உடனே மருத்துவமனையில் உடனே சேர்க்க ஏற்பாடு செய்யும்படியும், ஸ்டேஷனில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிஐஎஸ்எப் குழுவை தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.

கிட்டர்னி ஸ்டேஷனில் மகளுடன் பூஷண் இறக்கப்பட்டார். இறங்கியதும் அவர் மயக்கம் அடைந்தார். பேச்சு, அவரை சூழ்ந்த சிஐஎஸ்எப் எஸ்ஐ எஸ் கே யாதவ் உள்ளிட்ட வீரர்கள், பூஷண் பேச்சு, மூச்சற்று போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனினும், காற்றோட்டம் இருக்கட்டும், அனைவரும் விலகுங்கள் எனக் கூறியப்டி சிஐஎஸ்எப் கான்ஸ்டபிள் ரத்தன் பிரசாத் குப்தா அதிரடியாக செயலில் இறங்கினார். பூஷணின் மார்பில் உள்ளங்கை கொண்டு பலமாக தட்டியும், கைகளை குவித்து குத்தியும், வாயில் வாய் வைத்து ஊதியும் மாரடைப்பு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிபிஆர் எனும் அவசர சிகிச்சையை ரத்தன் மேற்கொண்டதில், பூஷணுக்கு நினைவு திரும்பியது.

தந்தையின் நிலையை கவனித்து அழுது அரற்றிக் கொண்டிருந்த மகள், அவர் பிழைத்து எழுந்ததும், ‘‘அண்ணா, உயிர் உள்ளவரை உங்களை மறக்க மாட்டேன் அண்ணா’’, என ரத்தன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நன்றி தெரிவித்தார். படபடப்பு நீங்காத ரத்தன், ‘‘நன்றி இப்போது பொருட்டல்ல, கொஞ்சம் நகருங்கள்’’, என்றபடி, தயாராக இருந்த ஆம்புலன்சில் பூஷணை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னரே சமாதானமானார். பயணியின் உயிருக்கு முக்கியத்துவம் அளித்தும், மனிதநேயத்துடனும் சரியான சமயத்தில் அவசர சிகிச்சை அளித்த ரத்தன் பிரசாத் குப்தாவை கிட்டர்னி ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் அனைவரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: