×

ரேஷன் அட்டை மனுக்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

புதுடெல்லி: ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் மாநில அரசை கண்டித்த உயர் நீதிமன்றம், விரைவாக பரிசீலனை செய்து 3 வாரத்தில் பதிலளிக்கும்படி கெடு விதித்தது. இரண்டு ஆண்டாகியும் ரேஷன் அட்டை மனுவுக்கு அரசிடம் இருந்து பதிலில்லை எனக் குறை கூறி 2 பெண்கள் செய்த முறையீட்டை ெடல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா நேற்று விசாரித்தார். முறையீட்டு மனுவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டுப் பெற்ற தகவல்படியும், தேசிய உணவு பாதுகாப்பு இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் மூலமாகவும், 72 லட்சத்து 77 ஆயிரத்து 995 ரேஷன் அட்டைகளை ஆம் ஆத்மி அரசு வழங்கியிருக்க வேண்டும் என்றும், அதில் 72 லட்சத்து 22 ஆயிரத்து 236 மட்டுமே வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்தது. ஆக 55,000 ரேஷன் அட்டைகளை அரசு இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கிறது. இரண்டு ஆண்டுக்கு முன் விண்ணப்பித்தும், அட்டை நிலை என்ன என்று அரசு தரப்பில் யாரும் சரியாக பதிலளிக்காமல் அலைகழிக்கிறார்கள் என குறை கூறப்பட்டு இருந்தது.

அதையடுத்து அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், ‘‘அக்டோபர் 19ல் நடைபெற்ற விசாரணைக்குப் பின் இதுவரை மனுதாரர் ஏரியாவில் 400 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன’’, என்றார். அவரது பதிலில் அதிருப்தி அடைந்து நீதிபதி கூறியதாவது: ரேஷன் அட்டை பரிசீலனை செய்ய ஏன் தாமதம் என்பதற்கான அரசு தரப்பு விளக்கத்தை கூறாமல் வேறு எதோ புள்ளிவிவரம் கூறுகிறீர்கள். இரண்டு ஆண்டாக ரேஷன் அட்டை விண்ணப்பத்தை பரிசீலனை செய்யாமல் இருப்பது அரசு தரப்பில் தவறாகும். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோருக்கு உரிமை உள்ளது. அந்த உரிமை 2 ஆண்டாக பறிக்கப்பட்டு உள்ளது. இது முறையல்ல. இந்த மனுதாரர்கள் மட்டுமன்றி ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த அனைத்து மனுக்களையும் காலா காலத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம். ஏன் தாமதம். ரேஷன் அட்டை கோரும் மனுக்களை உடனே பரிசீலித்து, அது பற்றிய விவரங்களை வரும் 23ம் தேதி நடைபெறும் விசாரணையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சாவ்லா கூறினார்.

Tags : Government ,iCourt , Ration card petitions should be considered expeditiously: iCourt stern to the State
× RELATED தற்காலிக ஏற்பாடுதான் மினி...