கரூர் மாவட்டத்தில் 20,000 போலி வாக்காளர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

சென்னை: கரூர் மாவட்டத்தில் மட்டும் 20,000 போலி வாக்காளர்களை ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது போலி வாக்காளர் சேர்ப்பு தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற ெதாகுதிகளிலும் வாக்காளர்கள் நிறைய பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வாக்காளர் சேர்க்கப்பட்டதில் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே நாங்கள் புகார் கொடுத்து இருந்தோம். இப்போதும் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பூத் லெவல் ஏஜெண்டுகள் மூலமாக தான் வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம் போன்ற படிவங்கள் தர வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு அறிவுரை கொடுத்திருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிமுக சார்பில் பூத் லெவல்  ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்ட விவரம் தேர்தல் ஆணைய வெப்சைட்டிலும் இல்லை.

அவர்கள் பட்டியலும் இல்லை.ஆனால், பூத் லெவல் ஏஜெண்டுகள் அல்லாதவர்கள், அதாவது ஆளுங்கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள், பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், செல்வாக்கில்  இருக்கக்கூடியவர்கள் எல்லாம் கொண்டுபோய் படிவத்தை சேர்த்ததாக புகார் வந்துள்ளது. அந்த பட்டியலை பார்க்கும் போது சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் வயதே இல்லை. ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால் வயது இருக்க வேண்டும். முகவரி சரியாக இருக்க வேண்டும். இது இரண்டுமே இல்லாமல் ஏராளமான படிவங்கள் வந்திருக்கின்றன. இதனை தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட விவரமே எங்களுக்கு காட்டுகிறது. அதே போல கரூர் தொகுதிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ணராயபுரம் வாக்காளர்களை இங்கே சேர்த்து இருக்கிறார்கள். காரணம், அங்கே அதிமுக சார்பில் அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் போட்டியிட போகிறார். அவர் பக்கத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் போட்டியிட முடியாது.

ஆகவே அவர் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால், அங்கே இருக்கின்ற வாக்காளர்களை எல்லாம் இங்கே சேர்த்து இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் புகார் வந்துள்ளது. நாங்கள் தேர்தல் ஆணையத்தை கேட்பது எல்லாம் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் 20,000 பேர், மேலும் ஏற்கனவே சேர்க்கப்பட்ட 10,000 என 30 ஆயிரம் பேரின் முழு விவரங்களும் எங்களுக்கு வேண்டும். யார் எல்லாம் புதிதாக சேர்ந்தார்கள், எத்ததை பேர் ஷீப்டு ஆனார்கள் என்ற விவரங்களை எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கொடுக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட 30,000 பேரின் விவரங்களை சரிபார்க்கும் போது, பூத் ெலவல் ஏஜெண்டை வைத்து கொண்டு தான் சரிபார்க்க வேண்டும். அப்போது தான் தெளிவாக கண்டுப்பிடிக்க முடியும். இதை விட்டு விட்டால், இன்றைக்கு கரூரில் நடப்பது பிற மாவட்டங்களில் நடக்கலாம். ஏனவே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  இன்னும் 2 முகாம்கள் உள்ளது. கரூரில் நடந்ததை பார்த்து பிற மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியினர் இதை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: