சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் 3,458 படுக்கைகள் காலி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் 3,458 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. தமிழகத்தில் கடந்த 29ம் தேதி வரை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 ஆயிரத்து 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்துள்ளது. 30ம் தேதி வரை சென்னையில் 2,14,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,07,375 பேர் குணமடைந்துள்ளனர். 3,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,847 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் 3,458 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக அரசு கொரோனா சிகிச்சை மையங்களில் 1158 படுக்கைகள், கோவிட் கேர் மையங்களில் 10,940 படுக்கைகள், தனியார் மருத்துவமனையில் 7 படுக்கைகள் என்று மொத்தம் 22 ஆயிரம் படுக்கைகள் சென்னையில் காலியாக உள்ளது. தற்போது வரை சென்னையில் 24,800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் 2858 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கைகள்

சென்னை ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் 970 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 962 படுக்கைகளும்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 405 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  343 படுக்கைகளும், தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் 486 படுக்கைகளும், தாம்பரம் அரசு  மருத்துவமனையில் 41 படுக்கைகளும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 93  படுக்கைகளும், கிண்டி கிங் மருத்துவமனையில் 158 படுக்கைகளும் என்று மொத்தம் 3,458  படுக்கைகள் காலியாக உள்ளன.

Related Stories: