மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

உத்திரமேரூர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. இதனால், அப்பகுதியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இதைதொடர்ந்து, அம்மையப்பநல்லூர் கிராமத்தில் புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க, கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், ஏற்கனவே சிலர், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், அந்த இடத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை மேற்கண்ட பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதை அறிந்ததும், அருகில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள மக்கள், அங்கு திரண்டனர். இந்த பகுதியில், குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என கூறி, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உத்திரமேரூர் - வந்தவாசி சாலைக்கு சென்று, திடீர் மறியலி ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், உயர் அதிகாரிகளிடம், மேல்நிலை தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பேசுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: