செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பால் துண்டிக்கப்பட்ட தரைப்பாலம் 6 நாட்களுக்கு பின் திறப்பு

குன்றத்தூர்: கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடிக்கு மேல் உயர்ந்தது. இதையொட்டி, பாதுகாப்பு கருதி, கடந்த 25ம் தேதி 1000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. வெள்ளம் கரைபுரண்டோடியதால், குன்றத்தூர்- பெரும்புதூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த 6 நாட்களாக குன்றத்தூர் - பெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்தனர். அவர்கள் குன்றத்தூரில் இருந்து பெரும்புதூர் செல்லவும், பெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் செல்லவும் சுமார் 30 கிமீ சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடுவது குறைந்ததையடுத்து, நேற்று முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, இச்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடத்து, குன்றத்தூர் - பெரும்புதூர் சாலையை சீரமைக்கும் பணி விறு, விறுப்பாக நடந்தது. இந்த பணிகளை எம்எல்ஏ பழனி, நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் இந்த பகுதியில் ₹13 கோடியில் கட்டப்படும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தற்போது 4 இடங்களில் சுமார் 12 மீட்டர் நீளமுள்ள ராட்சத பைப்புகள் அமைத்து, அதன் மீது தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் உபரிநீர் திறந்தாலும், இச்சாலை சேதமடைய வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாலை திறந்துவிடப்பட்டது. பொதுமக்கள் சாலையை வழக்கம்போல் பயன்படுத்தினர்.

Related Stories: