தடுப்பூசி குறித்து குற்றச்சாட்டு கூறிய தன்னார்வலரிடம் 100 கோடி கேட்டு வழக்கு: சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி  5 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சென்னையை சேர்ந்த தன்னார்வலர் மீது ₹100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலாரக பங்கேற்ற சென்னையை சேர்ந்த 40 வயது வர்த்தக ஆலோசகர், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கடுமையான நரம்பு மற்றும்  உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி,  5 கோடி கேட்டு சீரம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, சீரம் நிறுவனம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், ``தன்னார்வலரின் உடல் நல பாதிப்புக்கும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உடல் நல பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டு  மருத்துவக் குழு தன்னார்வலரிடம் விளக்கிய போதிலும், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுவெளியில் இதனை கூறியுள்ளார். எனவே,  100 கோடி இழப்பீடு கேட்டு அவர் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் மருந்து குறித்து உலக அளவில் சந்தேகம் கிளப்பப்பட்ட நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்தது.

Related Stories: