அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது

பெங்களூரு:  பெங்களூரு உப்பார்பேட்டை சரகத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் கிரண் என்பவரிடம் பைக்கில் வந்த மர்ம நபர் விலையுயர்ந்த ஐபோனை திருடி சென்றார். இதுகுறித்து கிரண் கொடுத்த தகவலின் பேரில் உப்பார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். அப்போது ஐபோனை பறித்து சென்ற மர்ம நபர் குறித்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. அதை வைத்து செல்போன் திருடனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் முகமது உமர் என்று தெரிய வந்தது.  விலை குறைந்த செல்போனை திருடினால், அதிகளவு சம்பாதிக்க முடியாது என்று நினைத்து, ₹50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மதிப்பிலான ஐபோன்களை குறி வைத்து திருடி வந்துள்ளார்.  

செல்போனை திருடிய சில மணி நேரத்தில் விற்பனை செய்து விடுவது இவரது வழக்கம். எவ்வளவு கிடைக்கிறது என்று கிடையாது, திருடிய பொருளை கையில் வைத்திருந்தால் ஆபத்து என்று நினைத்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இது தொடர்பாக ஏற்கனவே பேட்டராயணபுரா, சந்திரா லே அவுட், வி.விபுரம், சங்கர்புரா, விஜயநகர் உள்பட 13 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது உப்பார்பேட்டை வழக்கில் கைதாகியுள்ளார். சோதனையில் இவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த ஐபோன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பின்னணியில் வேறு சிலர் இருப்பதாக கூறப்படுவதால் உப்பார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: