அண்ணா பல்கலைக்கழக உத்தரவு செல்லும் தேர்வு கட்டணம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவதேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடக்கோரிஅண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சௌந்தர்யா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயகுமார் விடைத்தாள் திருத்தப்பணி தவிர, மற்ற பணிகளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்பது அனுமதிக்கத்தக்கதல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும். விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட தேர்வுக்கு பிந்தைய செலவுகளுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், பல்கலைக்கழக நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு செல்லும். மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் 4 வாரங்களுக்குள் பல்கலைக்கழகத்திடம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: