×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்தி 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர்  ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: பல லட்சம் விவசாயப் பெருமக்கள் 4 நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்என்று நிபந்தனை விதிக்கும் மத்திய அரசுக்கு, கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“குறைந்தபட்ச ஆதார விலை”என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை, விவாதமே இன்றி, நிறைவேற்றி, விவசாயிகளின் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பாஜ அரசு.
இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, இலவச மின்சாரத்தையும் பறிக்க திட்டமிடுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது என்று பேசியிருப்பது,  போராட்டத்தை அவமதிப்பதாகஉள்ளது.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்லும் பல்வேறு வழிகளில் அணிவகுத்துப் போராடி வருகிறார்கள். விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்னைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அதற்குப் பதில், “பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை”; “ போராடும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு”; “போலீஸ் தடியடி”; “டெல்லிக்கு வரும் விவசாயிகளை, ஜந்தர் மந்தரில் இடம் தருகிறோம் என்று பொய் சொல்லி, வேறு மைதானத்திற்குக் கொண்டு போய் அடைப்பது”; என்று ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி, அராஜக நடைமுறைகளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, விவசாயிகளை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கருதி, கச்சை கட்டிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விவசாய விரோத சட்டத்தை, நாடாளுமன்றத்திலேயே அதிமுக ஆதரித்து குரல் கொடுத்தது, அதிமுக விவசாயிகளுக்கு செய்த துரோகம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதுபோலவே, தமிழக சட்டமன்றத்திலும், அதற்கு நிகரான ஒரு சட்டத்தை அதிமுக, கொண்டு வந்துவிட்டது. விவசாயிகள் விரோத செயல்களில் பாஜ- அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன. ஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுகூட, அறுபத்து இரண்டு கோடி விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் காட்டிட மறுப்பது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கவலை அளித்திடும் நிகழ்வாகும்.

ஆகவே, ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் நரேந்திர மோடி அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம்  நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுகூட, 62 கோடி விவசாயப் பெருமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் காட்டிட மறுப்பது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கவலை அளித்திடும் நிகழ்வாகும்.

Tags : government ,struggle ,talks ,party leaders ,Congress ,DMK , The Central Government should announce the repeal of the 3rd Agriculture Act by holding talks with the agitating farmers: All party leaders including DMK, Congress and Madhyamaka urge PM
× RELATED புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்