மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப்பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை: அரசு தகவல்

மதுரை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் போன அரசுப் பள்ளி மாணவர்களை, மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகம்மது ஜமீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டேன். தனியார் மருத்துவக்கல்லூரியில் பிடிஎஸ் படிப்பிற்கு 2 சீட்கள் இருந்தன. உடனடியாக ரூ.11,610 செலுத்துமாறு கூறியதால் என்னால் எனக்கான இடத்தை உறுதிபடுத்த முடியவில்லை.

நவ. 19ல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்பதாக அறிவித்தனர். இதை முன்பே அறிவித்திருந்தால், எனக்கு பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கும். என்னைப்போல் மேலும் 3 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்பில் எனக்காக ஒரு இடத்தினை ஒதுக்கி வைக்கவும், எனக்காக மீண்டும் ஒரு இடத்தை தேர்வை செய்ய வாய்ப்பளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘முதல் நாள் கவுன்சலிங் நடந்தது. தனியார் கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்த முடியாததால் சீட்டை தேர்வு செய்ய முடியாமல் வெளியேறினர். ஆனால், மறுநாள் தாமதமாக முதல்வர் அறிவித்தார். இதனால் வாய்ப்பு பறிபோனது’’ என்றார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, ‘‘மனுதாரர் மட்டுமின்றி மேலும் பலர் கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளனர். விடுபட்டு போன அரசுப்பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் நல்ல முடிவு கிடைக்கும். இதுகுறித்த விபரத்தை பெற கால அவகாசம் தேவை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘இனி வரும் காலங்களில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கலாமே’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.4க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: