நிவர் புயலால் நிலத்திலேயே அழுகியது சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் (சம்பார் வெங்காயம்) சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியடையும் காலங்களில் கூட சின்ன வெங்காயம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவதில்லை. எனவே, ஓரளவு லாபம் கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால், புனல் காடு கிராமத்தில் சாகுபடி செய்திருந்த சின்ன வெங்காயம் விளை நிலத்திலேயே அழுகியது. தொடர்ந்து மழை பெய்ததாலும், தண்ணீர் வெளியேறாமல் நிலத்தில் தேங்கியதாலும் சின்ன வெங்காயம் அழுகியதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். நெல், கரும்பு, வாழை போன்ற பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதை போல, சின்ன வெங்காயம் சேதத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: