முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

மதுரை: ஆசிரியராக பணியாற்றுவதை மறைத்து இலவச பட்டா பெற்றது சமூகவிரோதச் செயல். முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் முழு சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா பல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மனுதாரரின் மகன் அரசு மருத்துவராக உள்ளார். இவர் மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளனர்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும், ராஜா தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக கூறி ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியர், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை சமூகவிரோத செயலாகவே நீதிமன்றம் பார்க்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவோர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சமூக விரோதிகள்தான். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும். முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமின்றி, அவர்களது முழு சொத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும். அரசு ஊழியர் ஒருவரின் குடும்பத்திற்கு மட்டும் 5 பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது கண் துடைப்பு நடவடிக்கை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர் மீது புகார் அளித்து குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.1 லட்சம் வரை அரசிடம் சம்பளமாக பெற்றுக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை பிச்சைக்காரர்கள் என்று அழைப்பதில் தவறு இல்லை.

அரசுப்பள்ளி ஆசிரியர், தன் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்? அரசு ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் ஜாதி மற்றும் மதம் சார்ந்த சங்கங்களை வைத்துள்ளனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், ‘‘மனுதாரர் மற்றும் மனுதாரருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் ஆகியோரின் முழு விவரங்களையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். போலீசாரின் வழக்கு விபரங்களையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவோர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சமூக விரோதிகள்தான்.

Related Stories: