மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு நிபந்தனை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: மருத்துவ படிப்புகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத இடஒதுக்கீடு என்ற நிபந்தனையை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த வி.தீபா தாக்கல் செய்த மனுவில், நான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எனது தந்தையின் ஆண்டு வருமானம் ரூ.66 ஆயிரம். நான் எனது 6ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்தேன்.

குடும்ப வறுமையின் காரணமாக தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால், 7ம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். தொடர்ந்து 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்த நான், 12ம் வகுப்பில் 927 மதிப்பெண்களும், நீட் தேர்வில், 449 மதிப்பெண்களும் பெற்றேன்.தமிழக அரசு சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. 6ம் வகுப்பை நான் தனியார் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் என்ற நிபந்தனையால் எனக்கு இடம் வழங்கப்படவில்லை.

அரசின் இதுபோன்ற வகைப்பாடுகளால் என்னைப் போன்ற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதி, மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: