கட்சி தொடங்குவது இப்போது இல்லை மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாட்டில் அதிருப்தி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழகத்திலுள்ள ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று 10 மணிக்கு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி பேசியது: நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல வருடங்களாக நீங்களும் கேட்டு வருகிறீர்கள். உங்களின் ஆசையையும், ஆர்வத்தையும் அறிவேன். நானும் உங்களை காக்க வைத்து கொண்டிருக்கிறேன். வருகிற தேர்தலையொட்டி கட்சியை அறிவிப்பேன் என்று நான் அறிவித்ததையும் மறுக்கவில்லை. அதற்கு நானும் தயாராகிக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் இன்றைக்கு எனது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது உடல்நிலை பற்றி உங்களுக்கும் தெரியும். மருத்துவர்கள் நான் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்கள். கொரோனாவும் இந்த சமயத்தில் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா சமயத்தில் வெளியே செல்லக்கூடாது என டாக்டர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளனர். நான் நேரடியாக களத்தில் இறங்காமல் மீடியா மூலம் அறிக்கை விட்டுக் கொண்டு மட்டும் தேர்லில் ஜெயிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் கருத்தை கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேசிய மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். கடைசியாக பேசிய ரஜினி ‘அரசியல் கட்சி தொடர்பாக நான் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் ‘உங்கள் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என்றனர். முன்னதாக மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ரஜினி பேசும்போது, ‘மன்ற நிர்வாகிகள் சிலரது செயல்பாடுகள் சரியில்லை. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். மக்கள் மன்றத்தை வலுப்படுத்த வலியுறுத்தி இருந்தேன். ஆனால் மன்றத்தை நான் விரும்பியபடி வலுப்படுத்தவில்லை’ என்றார்.

* விரைவில் முடிவு அறிவிப்பேன்

கூட்டத்தை முடித்துக்கொண்டு போயஸ்கார்டன் வீடு திரும்பிய ரஜினி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்தார்கள். அரசியல் நிலைப்பாடு குறித்து எனது பார்வையை விளக்கி கூறினேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்களுடன் இருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Related Stories: