தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்கப்படும்: மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை அவர் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஒக்கியம் மடு, முட்டுக்காடு முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பருவ காலங்களில் பொழிகின்ற கனமழையினால் ஒவ்வொரு முறையும் சென்னை மாநகரம் மற்றும் சென்னை மாநகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், அந்த பகுதிகளிலுள்ள தண்ணீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்காக நானே நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன்.

வெள்ளம் வடிவதற்கு உண்டான தீர்வாக, பள்ளிக்கரணை் சதுப்பு நிலத்திலிருந்து ஒக்கியம் மடு வழியாக பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கும் முகத்துவாரம் தற்போது 30 மீட்டர் அகலம் உள்ளதை 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் மத்திய பகுதியில் அமைகின்ற கால்வாய் மூலமாக நேராக இரண்டு கிலோ மீட்டரில் வருவதுபோல் ஏற்பாடு செய் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

நீண்டகால திட்டமாக, தற்பொழுது கிழக்கு தாம்பரம், மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து வரும் மழை நீர், செம்மஞ்சேரி வந்தடைந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கியம் மடு, பக்கிங்காம் கால்வாய், முட்டுக்காடு வழியாக கடலில் கலக்கிறது.

மேற்படி நீர்வழித் தடத்திற்கு கூடுதலாகவும், விரைவாகவும் வெள்ள நீர் வடிய ஏதுவாக புதுப்பாக்கம், சிப்காட்-நாவலூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சாலை மற்றும் துரைப்பாக்கம் சாலையில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்ல பெரிய கால்வாய்களை கட்ட வேண்டுமென்பதற்காக என்னுடைய அரசு ரூ.581 கோடி மதிப்பிலான திட்டங்களை செயலாக்கம் செய்ய மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது, கிடைக்குமென்று நம்புகிறோம். கனமழை பெய்யும்போது மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தண்ணீர் தேங்குவதால் உள்ளாகும் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண அரசால் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த பகுதிகளில் மாற்றுக் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளை தரம் உயர்த்தும் பணிக்காக ரூ.71.30 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உலக வங்கி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் மக்கள், வெள்ள பிரச்னைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். தற்பொழுது 3,000 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நிதி தேவையென்பதால் அதற்கான திட்டங்களை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: