சமஸ்கிருதத்தை திணிப்பது ஏன்? திருமாவளவன் கேள்வி

சென்னை: மத்திய அரசு பிறமொழி பேசும் மக்களிடையே இந்தியைப் போல சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதிகை தொலைக்காட்சியில் இப்போது ஒவ்வொரு நாளும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு 15 நிமிடங்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம், பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப்போலவே சமஸ்கிருதத்தையும் திணிப்பது ஏன், இது பாஜவின் மொழிவெறிப் போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த அரசாணை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அத்துடன், இது தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரானது மட்டுமல்ல, அனைத்துப் பிற மொழிகளுக்கும் பிறமொழி பேசும் மக்களுக்கும் எதிரானதாகும். எனவே, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்த ஆணையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: