சட்டவிரோத கிரானைட் குவாரி குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் பாதுகாப்பு: அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரானைட் குவாரி மோசடி தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக சகாயம் ஐஏஎஸ் விசாரணை நடத்தினார். அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரை விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து அரசு விடுவித்தது. அதேவேளையில், சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள். அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர். கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories: