உண்மைகளை உலகுக்கு சொல்லக் கூடாது என்று காட்சி, அச்சு ஊடகங்களை மிரட்டுவதா? திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஊடக கண்காணிப்பு குழு கூட்டத்தில் கண்டனம்

சென்னை: திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அருள்மொழி (திக), கோபண்ணா(காங்கிரஸ்), மகேந்திரன் (சிபிஐ), கனகராஜ் (சிபிஎம்), மல்லை சத்யா (மதிமுக), ரவிக்குமார் (விசிக), அப்துல் ரஹ்மான் (இயூமுலீ), அப்துல் சமது (மமக),சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து வரலாறு காணாத அளவில் விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தலைநகரான டெல்லியை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று தேசிய ஊடகங்களை மத்திய அரசு மிரட்டுகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் திமுக கூட்டணிக்கு வலு சேர்க்கும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள காட்சி, அச்சு ஊடகங்களைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மிரட்டுகிறது என்று அறிகிறோம். உண்மைகளை உலகுக்கு சொல்லக் கூடாது என ஊடகங்களை மிரட்டும் மத்திய, மாநில அரசுகளின் இந்த சனநாயக விரோத, சட்ட விரோத நடவடிக்கையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மிரட்டல்களுக்குப் பணிந்து போக வேண்டாம்” என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: