ஆன்லைன் முறையில் தணிக்கை: மின்வாரியம் புதிய திட்டம்

சென்னை: தமிழக மின்வாரியம் ஆன்லைன் முறையில் தணிக்கை செய்யும் புதிய திட்டத்தை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் டிஜிட்டல் முறையிலான கிளவுட் ஆடிட் (தணிக்கை) முறையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல், அனைத்து வட்டங்களிலும் பொருத்தமான சாப்ட்வேர் மூலம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் இணக்க சேவை வழங்குநர்களிடமிருந்து பணி அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும்.

இதற்கு தேவையான ஆவணங்களை அந்தந்த ஒப்பந்ததார்கள் ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும். மேலும் சான்றிழுக்கான கட்டணங்கள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ₹2.50 விகிதத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹500 முதல் அதிகபட்சம் ₹4,000 மற்றும் ₹300 மறு தணிக்கைக்கு ஆன்லைன் இணக்க சேவை வழங்குநர்களுக்கு ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதற்காக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் டிஜிட்டல் அடிப்படையிலான சட்டரீதியான இணக்க சேவைகள், பில் செயலாக்க அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. டிஜிட்டல் அடிப்படையிலான தானியங்கி அனுமதிக்குப் பிறகுதான் பில்கள் செயல்படுத்தப்படும்.

இதை எந்த ஒரு விலகலும் இல்லாமல் கண்டிப்பாக, ஒப்பந்ததாரர்கள் பின்பற்ற வேண்டும் எனக்கூறி மின்வாரியம் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: