திருவள்ளூர் அருகே 5 நாட்களாகியும் வடியாத தண்ணீர்: 6 நகர் பொதுமக்கள் கடும் அவதி

திருவள்ளூர்: நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற ஈஸ்வரன் நகர், மாஸ் நகர், பாலாஜி நகர், திருநகர், பாரதி நகர், யுவபாரதி நகர் ஆகிய பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் பாம்பு, தவளை, நத்தை உள்பட விஷப்பூச்சிகள் உருவாகி மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நகர்களுக்கு அருகே பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 70 வீடுகளுக்கு மேல் கட்டியுள்ளனர். இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் இந்த 6 நகர் பகுதிகளிலும் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சதாபாஸ்கரன் தலைமையில் பொதுமக்களே திரண்டு வந்து சில இடங்களில் தண்ணீரை வெளியேற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் முழுவதுமாக அப்புறப்படுத்த முடியவில்லை. மழை பெய்து 4 நாட்களாகியும் தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வழிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: