தமிழக கடற்கரை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால், எண்ணூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.2-ம் தேதி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளது. அன்றைய தினம் புதுக்கோட்டை, சிவகங்கை விருதுநகர் தஞ்சை திருவாரூர், நாகை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழையுடன் மணிக்கு 45- 55 கி.மீ. வேகத்தில் காற்று விடக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிச. 3-ம் தேதி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத மழை பெய்யும் என்றும் சிவகங்கை விருதுநகர், ராமநாதபுரத்தில் மிக கனமழையுடன் 65 கி.மீ. வேகத்துக்கு காற்று விடக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால், எண்ணூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அண்மையில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. நிவர் புயல் கரையை கடந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இது மண்டலமாக வலுப்பெற்றிருப்பதை அடுத்து தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால், எண்ணூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: