இந்துத்துவா மையம்: பெல்காம் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்கு இடமில்லை... கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு.!!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெல்காம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அம்மாநில அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் அங்காடி சுரேஷ் சன்னபசப்பா கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார்.

அங்காடி சுரேஷ், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் ரயில்வே இணையமைச்சராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே, அங்காடி சுரேஷ் மறைவையடுத்து பெலகாவி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாநில ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பெலகாவி மக்களவை தொகுதி கர்நாடகா மாநிலத்தின் இந்துத்துவா மையமாகவுள்ளது. இந்துக்களிடையே எந்தவொரு சமூகத்திற்கும் பெலகாவி தொகுதியில் நாங்கள் சீட் கொடுக்கலாம். யாருக்கும் கொடுக்கலாம், ஒருவேளை லிங்காயத்துகள், குருபாக்கள், வக்காலிகாக்கள் அல்லது பிராமணர்கள் ஆனால் நிச்சயமாக அது முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது என்றார்.

மக்களின் நம்பிக்கையை பெற்ற வேட்பாளர் தான் வெற்றி பெற முடியும் என்பதை கவனத்தில் கொண்டு பெலகாவி தொகுதிக்கு வேட்பாளரை பாஜக தேர்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். பெல்காம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அம்மாநில அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: