×

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு:: கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? : திருமாவளவன் கேள்வி

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கென நேரம் ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான இந்த சமஸ்கிருதத் திணிப்பு ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
 
பிரசார் பாரதி சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள பொதிகைத் தொலைக்காட்சியின் குறிக்கோள்கள் எவை என்பது அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளை மேம்படுத்துவதற்கென்றே மாநில அளவிலான தொலைக்காட்சி சேவைகளை இந்த சட்டம் உருவாக்கியுள்ளது. அந்த சட்டத்தின் குறிக்கோளின்படி தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவோ, விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவோ, மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிப்பதற்காகவோ எவ்வித நிகழ்ச்சிகளும் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தப்படுவதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு 15 நிமிடங்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப்போலவே சமஸ்கிருதத்தையும் திணிப்பது ஏன்?  இது மதவெறிபிடித்த பாஜகவின் மொழிவெறிப் போக்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த அரசாணை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
 
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியா முழுவதுமே 24 ஆயிரம் பேர்தான் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 803 பேர் மட்டுமே உள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. ஏழரைக் கோடி தமிழர்கள் இருக்கும் இந்த மாநிலத்தில் 803 பேருக்காக செய்தி அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக் கணக்கானோர் வசிக்கின்றனர், இதே அளவுகோலின்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் செய்தி அறிக்கைக்காக 15 நிமிடங்களை மத்திய அரசு ஒதுக்க முன் வருமா ? அவ்வாறு செய்யாத போது எதற்காக சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டில் நேரம் ஒதுக்க வேண்டும்?

இந்த ஆணை, சங்பரிவார்களின் செயல்திட்டத்தை  நடைமுறைப் படுத்துவதற்கே என்பது தெரிகிறது.  அத்துடன், இது தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிரானது மட்டுமல்ல; அனைத்துப் பிற மொழிகளுக்கும் பிறமொழி பேசும் மக்களுக்கும் எதிரானதாகும்.

எனவே, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான இந்த ஆணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக - சங்பரிவார் அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sanskrit News Broadcast ,listeners , Package, TV, in Sanskrit, Thirumavalavan, Question
× RELATED டெம்போ டிரைவர்களை மிரட்டி தாக்கி மாமூல் கேட்கும் ரவுடிகள்