×

மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தற்கொலை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை என புகார்

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இளம்பெண் மரணத்தில் ஆர்டிஓ விசாரணைக்காக ஆவணங்கள் ஒப்படைக்க சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளரை திருமங்கலம் வருவாய் ஆய்வாளர் அவமதித்ததாக மற்றோரு புகார் எழுந்துள்ளது. சென்னை அடையாறு ராஜாஜி பவனில் உள்ள மத்திய உளவு துறையில் அதிகாரியாக பணிபுரிபவர் ஹரிஷ்குமார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த B Tech பட்டதாரியான 23 வயதான நிகிதா என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் ஆனது. இருவரும் பெசன்ட் நகர் பஜனை கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். கடந்த 25-ம் தேதி படுக்கை அறையில் நிகிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர் கைப்பட எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அதில்; இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியிருந்தார்.

போலீசார் விசாரணையில் நிகிதாவுக்கும் ஹரிஷ்குமாருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக பேசப்பட்ட 20 லட்சம் ரூபாயில் 17 லட்சம் ரூபாயை நிகிதாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். 3 லட்சம் ரூபாயை கேட்டு ஹரிஷ்குமாரும் அவரது தாயாரும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு நிகிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த மாதம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து கடந்த 25-ம் தேதி ஹாரிஸின் தாய் சென்னை வந்துள்ளார்.

அதன் பிறகு தான் நிகிதா தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமையால் தான் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே ராயப்பேட்டை பிணவறையில் பராமரிப்பு பணி நடப்பதால் நிகிதாவின் உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் கிண்டி ஆர்டிஓ விசாரிக்காமல் திருமங்கலம் ஆர்டிஓ விசாரிக்க ஆணை மாற்றப்பட்டது. அதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு விசாரணை அதிகாரியான பெண் உதவி ஆய்வாளர் பாரதி திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது சீருடையில் இருந்த தன்னை வருவாய் ஆய்வாளர் ஒருமையில் பேசி அவமதித்ததாக உதவி ஆய்வாளர் பாரதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உளவுத்துறை அதிகாரிக்கு சாதகமாக வருவாய் ஆய்வாளர் செயல்படுகிறாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Central Intelligence Agency ,suicide , Central Intelligence Agency wife commits suicide
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு