கேஷ்பேக் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது: நடவடிக்கை எடுக்க இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம்.!!!

டெல்லி: கேஷ்பேக் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு  எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்  எழுதியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுதிய  கடிதத்தில், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் புனிதமற்ற  முறையில் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன்  கூட்டணி வைத்து வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் மற்றும் பிற  சலுகைகள் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த பொருள்களை இணையம் அல்லாத முறையில் பிற கடைகளில் அதே குறிப்பிட்ட வங்கியின்  அட்டைகளை பயன்படுத்தி வாங்கும்போது அந்த குறிப்பிட்ட வங்கிகள் கேஷ்பேக் உள்ளிட்ட பிற சலுகைகளை  வழங்கவில்லை. இந்த நிறுவனங்களுடன் வங்கிகள் வைத்துள்ள கூட்டணி, இணையம் அல்லாத நிறுவனங்கள்  எளிதான முறையில் தொழில் செய்வதைத் தடை செய்கிறது. வங்கிகள் இந்தச் செயல்கள், அரசியலமைப்புச்  சட்டம் 19, 301-வது பிரிவுகள் அனைத்து இந்திய குடிமகன்களும் தொழில் செய்வதற்கான உரிமையை  மீறுகிறது. வங்கிகள் உடனடி 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் வழங்குவது போட்டிச் சட்டம் 2002, பிரிவு 3-க்கு  எதிரானது.

இணைய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் பொருள்கள் வாங்கும்போது  மட்டும் சலுகை வழங்குவது இந்தியாவுக்குள்ளான போட்டிக்கு எதிரானது. இணைய வர்த்தக நிறுவனங்களுடன்  கூட்டணி வைத்துக் கொண்டு நியாயமற்ற வகையில் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சிறு குறு  தொழிலாளர்களுக்கு எதிராக வங்கிகள் தொழில் நடைமுறையை செய்கின்றன.

ரிசர்வ் வங்கிகள் ரெப்போ ரேட்டை குறைத்தாலும் கூட வங்கிகள் அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி  விகிதத்தைக் குறைப்பதில்லை. இந்த வங்கிகளுக்கு சாதாரண குடிமகன்களுக்கு 0.5 சதவீத சலுகைகள் கூட  அளிப்பதில்லை. ஆனால், திடீரென்று பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரை  கேஷ்பேக், தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன.

மேற்கண்ட சூழ்நிலைகள்தான் இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு கடிதம் எழுதத் தூண்டியுள்ளது. இந்த  விவகாரம் தொடர்பாக நீங்கள் உடனடியாக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து இந்த  செயல்பாட்டை தடுக்க வேண்டும். இணைய வர்த்தக நிறுனவங்களுக்கு வங்கிகளால் அதிக அளவுக்கு  வழங்கப்பட்ட தள்ளுபடிகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: