குரு நானக் ஜெயந்தி.. டெல்லி போராட்ட களத்தில் பிரார்த்தனை செய்த விவசாயிகள்…!!

டெல்லி : டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குரு நானக் ஜெயந்தியை யொட்டி அமைதியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி, தலைநகர் டெல்லியின் வடபகுதியில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள், கடந்த 26ம் தேதி டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள், டிராக்டரிலும் மற்றும் நடந்தும் குழுக்களாக பிரிந்து டெல்லி எல்லையை அடைந்தனர். விவசாயிகளில் சிலர், பாலத்தின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தூக்கி பாலத்திற்கு கீழே எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.  இதனை மீறியவர்களை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

பேரணிக்கு சென்றவர்கள் அன்றிரவு சுங்க சாவடியருகே படுத்து உறங்கினர்.   2வது நாள் இரவில் புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் படுத்து உறங்கினர். தொடர்ந்து நேற்று முன்தினம் 3வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது.  புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர்.  நேற்று 4வது நாளாகவும் போராட்டம் நீடித்தது. இரவில் டெல்லி மற்றும் உத்தர பிரதேச எல்லை பகுதியான காஜிப்பூர் மற்றும் காசியாபாத் பகுதியில் விவசாயிகள் சிலர் படுத்து உறங்கினர்.  

கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்புகள், இன்று 5வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர். இதேபோன்று திக்ரி எல்லை பகுதியில் இருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்தபடி, இறை நூல்களை படித்தும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு மருத்துவ பரிசோதனை

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைபவர்களால் கொரோனா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி மற்றும் அரியானா எல்லை பகுதியான சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: