×

மழைக்கால தொற்று நோய்களை தடுக்க அரியலூரில் நடமாடும் மருத்துவக் குழு சேவை

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பில் மழைக்காலங்களில் பரவும் நோய் தொற்றுகளை தடுப்பதற்கான நடமாடும் மருத்துவக் குழுவின் சேவையை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் பேசியதாவது: மழைக்காலங்களில் பெருகும் நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் சிறப்பு மருத்துவக் குழுவினர்கள் மூலம் கிராமங்கள் தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 201 ஊராட்சிகள், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகள் உட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனைகள் மூலம் தகுந்த சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் தொற்று நோய் வராமல் தடுக்கவும் கரூர் மாவட்ட பொது சுகாதாரதுறை மூலம் நடமாடும் 3 மருத்துவக்குழுக்களும், 3 தொற்று நீக்கக்குழுக்களும் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஒரு நோய்பரப்பிகள் கட்டுப்படுத்தும் குழுக்களும் இணைந்து இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபடவுள்ளனர். மேலும் இக்குழுவினருடன் அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் 6 நடமாடும் மருத்துவக்குழு, 12 பள்ளி சுகாதார மருத்துவக்குழு, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனங்கள், கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் இப்பணிகளில் ஈடுபட உள்ளது.

இம்முகாம்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், டெங்கு காய்ச்சல் உட்பட பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல், தொற்று நீக்கப்பணிகள், தண்ணீரில் குளோரின் பரிசோதனை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்மருத்துவக்குழுவினரின் சேவையினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, ஒன்றியக்குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,Mobile Medical Team Service , Medical Team Service
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...