×

சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் ராகுல் காந்தி: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று காணொளி காட்சி மூலம் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதில் தேர்தலில் வெற்றி வியூகம் அமைப்பது குறித்து மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருவதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியதோடு பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வருகிறது.

சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையும் தமிழக நிர்வாகிகளிடம் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்ட அறிவுறுத்தியுள்ளது. கிராமம் வரையிலான அடிமட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 4 மணி அளவில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். மேலும், தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கின்றனர்.
 இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது, திமுக தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கக்கூடிய தொகுதிகளில் அனைத்திலும் வெற்றி பெறுவது, கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வது, வெற்றிக்கான தேர்தல் வியூகம் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் விவசாய பிரச்னைகளை எப்படி முன்னெடுத்து செல்வது, காங்கிரஸ் கட்சியை கிராமங்கள் வரை வலுப்படுத்துவது, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கருத்துகளை கேட்கிறார். தேர்தல் பணிகளை விரைவுபடுத்த கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : polling station ,consultations ,executives ,Rahul Gandhi ,Congress ,Tamil Nadu ,elections ,Assembly , Heated polling station; Rahul Gandhi holds consultations with Tamil Nadu Congress executives at 4 pm: Debate on facing Assembly elections
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...