×

family Tree - ‘The God Father’

நன்றி குங்குமம்

படத்துக்கு காரணமே அமெரிக்காவை ஆட்டிப்படைத்த இந்த க்ரைம் குடும்பம்தான்!

இருபதாம் நூற்றாண்டில் நியூயார்க் நகரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ஐந்து க்ரைம் குடும்பங்கள். பொனான்னோ, கொலம்போ, காம்பினோ, ஜெனோவீஸ், லக்கீஸ் என்பது அந்தக் குடும்பங்களின் பெயர்கள். இவர்களின் உண்மையான சொத்து மதிப்பு பில்கேட்ஸையே பின்னுக்குத் தள்ளும். அமெரிக்காவில் அபின் பிசினஸ் முதல் அரசியல் வரை எல்லாமே இவர்களது சொல்படிதான் நடந்தன. பணம், அதிகாரம், ஆதிக்கம்தான் இவர்களது நோக்கம்.
இத்தாலியின் சிசிலி நகரத்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து அங்கே மாபெரும் க்ரைம் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தக் குடும்பங்களின் முக்கிய தொழில்கள்: வங்கிக்கொள்ளை, பண மோசடி, சதி வேலை, ஆள் கடத்தல், கொலை, போதைப் பொருள் விற்பனை, மக்களை மிரட்டி பணம் பறித்தல், மீட்டர் வட்டி, சூதாட்டம். இரண்டு உலகப் போர்கள், அரசியல் மாற்றங்கள், எஃப்பிஐ கெடுபிடி, சிக்கினால் கடுமையான தண்டனை... என பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக க்ரைமில் காலூன்றி நின்றன இந்தக் குடும்பங்கள். இவற்றில் கொடூரமானது பொனான்னோ குடும்பம். 1970 முதல் 90 வரை நியூயார்க்கில் மக்கள் தெருவில் இறங்கி நடக்கவே பயந்தனர். அதற்கு முக்கிய காரணமே இந்தக் குடும்பம்தான். பொனான்னோ குடும்ப வரலாறு இத்தாலியின் சிசிலி நகரில் 1886ம் வருடம் பிறந்தார் சல்வதோர் மாரன்ஸானோ. பாதிரி யார் ஆகவேண்டும் என்பது இவரது கனவு. அதற்கான படிப்பை படித்தார். ஆனால், சிசிலியில் உள்ள ஒரு மாஃபியா கும்பலுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல்.

கனவைத் துறந்து அடியாளாக அவதாரம் எடுத்தார். இவரது வேலை வாங்கும் திறன் சக அடியாட்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்தது. 1920ல் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து ப்ரூக்லினில் குடியேறினார். அங்கே சிசிலியைச் சேர்ந்த டான் விட்டோ ஃபெர்ரோ என்பவர் சின்னச் சின்ன மாஃபியா குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். விட்டோவுடன் இணைந்து கள்ளச்சாராய வியாபாரம், விபசாரம், போதைப்பொருள் விற்பனையில் தனிமுத்திரை பதித்தார் சல்வதோர். க்ரைம் பிசினஸின்போது கிடைத்த ஜோசப் பொனான்னோவின் அறிமுகம் சல்வதோரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இத்தனைக்கும் சல்வதோரைவிட 19 வயது இளையவர் பொனான்னோ. இருவரும் சேர்ந்து க்ரைம் தொழிலில் பல பரிமாணங்களை உருவாக்கி நியூயார்க்கையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில் சல்வதோர் உருவாக்கிய ‘மாரன்ஸானோ க்ரைம் குடும்பம்’ முக்கியமானது. க்ரைம் செயல்களில் கும்பலாக இயங்கிவந்த குழுவினரை ஒரு குடும்பமாக வடிவமைத்தார் சல்வதோர். ரத்த சம்பந்தமில்லாமல், தாமாகவே சேர்ந்த கூட்டம் இது.

செய்வது குற்றமாக இருந்தாலும் அதை முறைப்படி நெறிப்படுத்தினார். ஓர் அரசாங்க அலுவலகம் இயங்குவது போல க்ரைம் தொழிலையும் இயக்கினார். அதனால்தான் அமெரிக்க உளவுத்துறையான எஃப்பிஐயால் இவர்களை நெருங்க முடியவில்லை. தன்னைப் போலவே நியூயார்க்கை ஆட்டிப்படைத்த இத்தாலிய கும்பல்களை முறைப்படுத்தி ஐந்து குடும்பங்களாகப் பிரித்தார். அவைதான் ஐந்து க்ரைம் குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக பாஸ் இருந்தாலும் மொத்த குடும்பங்களுக்கும் இவர்தான் பாஸ். ‘Boss of all Bosses’ என்று அழைக்கப்பட்ட சல்வதோர் 1931ல் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது க்ரைம் உலகையே அதிர வைத்தது. மாரன்ஸானோ க்ரைம் குடும்பத்தின் பொறுப்புகள் எல்லாம் ஜோசப்பின் கைக்குச் செல்ல, பொனான்னோ க்ரைம் குடும்பம் பிறந்தது. இன்றும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது.

*குடும்ப அமைப்புக்ரைம் குடும்பத்தின் தலைவனை பாஸ், டான், லார்ட் என்று அழைப்பார்கள். குடும்பத்தைக் கட்டுப்படுத்துகிற எல்லா அதிகாரங்களும் இவருக்கு மட்டுமே உண்டு. இவரது உத்தரவுகளையும் முடிவுகளையும் பின்பற்றித்தான் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் செயல்பட வேண்டும். க்ரைமில் கிடைக்கும் மொத்த வருமானமும் இவர் கைக்குத்தான் முதலில் போகும். நேரடியாக களத்துக்கு வரமாட்டார். எங்கே இருக்கிறார் என்பது ரகசியம். இவர் இறந்த பிறகே இன்னொரு பாஸைத் தேர்வு செய்ய முடியும். பாஸின் வலதுகரமாக இருப்பவர் அண்டர்பாஸ். குடும்பத்தில் இரண்டாவது இடம் இவருக்குத்தான். பாஸ் இறந்துவிட்டாலோ அல்லது சிறையிலிருக்கும்போதோ அவரின் பொறுப்புகளை எடுத்துக்கொள்பவர் இவரே. பாஸின் மகன் அல்லது நம்பிக்கைக்குரிய சொந்தக்காரர்கள்தான் அண்டர்பாஸாக முடியும். இந்தப் பதவிக்கு வெளியாட்கள் வருவது சிரமம். ஒவ்வொரு கொள்ளைச் சம்பவம் அல்லது வருமானம் தரக்கூடிய செயலின்போதும் அண்டர்பாஸுக்கு ஒரு பங்கு கட்டாயம் போகும். பாஸ், அண்டர்பாஸுக்கு அடுத்து குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்தவர் கன்சிலியர். க்ரைம் குடும்பத்தின் பிரதிநிதி இவர். பாஸுக்கு ஆலோசனை வழங்குபவர். பாஸ் எடுக்கும் முடிவுகள் சம்பந்தமாக வாதிடுவதற்கு இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மற்ற குடும்பத்தின் பாஸ்கள், முக்கிய நபர்கள், அரசியல்வாதிகளுக்கும் பாஸுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்படுத்துபவர்.

க்ரைம் குடும்பத்தின் ரகசியங்கள் எல்லாம் அறிந்தவர். பாஸின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நபரே கன்சிலியராக இருப்பார். ஆனால், க்ரைம் மற்றும் பிசினஸில் இவரது ஈடுபாடு இருக்காது. இவருக்கு அடுத்த இடத்தில் கேப்டன்கள் வருகிறார்கள். ஒரு க்ரைம் குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து கேப்டன்கள் இருப்பார்கள். கேப்டன்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த குடும்பம் சிறியதா... பெரியதா... என்று அறியப்படுகிறது. சில நேரங்களில் பாஸின் நம்பிக்கையைப் பெறும்போது கேப்டன்கள் அண்டர்பாஸாக பதவி உயர்வு பெறுவார்கள். க்ரைம் நடவடிக்கைகளில் தனக்குக் கீழ் இருக்கும் சோல்ஜர்களை வழிநடத்துவது இவர்களது முக்கிய பணி. குடும்பத்துக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவது இவர்கள்தான். வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வைத்துக்கொண்டு மீதியை அண்டர்பாஸ் மற்றும் பாஸிடம் ஒப்படைக்க வேண்டும்.

குடும்பத்தின் கடைசி உறுப்பினர்கள் சோல்ஜர்கள். ஒவ்வொரு கேப்டனுக்கும் கீழ் ஐந்து அல்லது ஆறு சோல்ஜர்கள் இருப்பார்கள். போரில் சண்டையிடும் சிப்பாய்களைப் போல க்ரைம் செயல்களில் ஈடுபடுகிறவர்கள். போலீஸிடம் மாட்டுவது அல்லது எதிரி கும்பலிடம் அகப்பட்டு இறப்பது எல்லாம் இவர்கள்தான். அடுத்து அசோசியேட்ஸ். இவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்ல. ஆனால், க்ரைம் குடும்பம் ஈடுபடும் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களில் வெளியிலிருந்து பங்குபெறுவார்கள். குடும்பத்துக்கு ஏதாவது ஒருவகையில் உதவிகரமாக இருப்பார்கள். தங்களது திறமையை நிரூபித்தால் குடும்ப உறுப்பினராகி சோல்ஜராக பதவி உயர்வு பெறலாம்.

*ஜோசப் பொனான்னோசிசிலி நகரத்தில் சின்னச் சின்ன க்ரைமில் ஈடுபட்டுவந்த ஒருவருக்கு 1905ம் ஆண்டு மகனாகப் பிறந்தார் ஜோசப் பொனான்னோ. மூன்று வயதிலேயே குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். சல்வதோர் மாரன்ஸானோவின் வழிகாட்டலில் கள்ளச்சாராய வியாபாரத்தில் இறங்கிய போது இவரது வயது 18. அடுத்த நான்கு வருடங்களில் நிழல் உலக பிசினஸ் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. சல்வதோரின் மரணத்துக்குப் பிறகு பொனான்னோ க்ரைம் குடும்பத்தின் பாஸாக பொறுப்பேற்றார். அப்போது இவரின் வயது 26. மிக இளம் வயதிலேயே ஒரு க்ரைம் குடும்பத்துக்கு பாஸானவர் மற்றும் அதிக வருடங்கள் பாஸாக இருந்தவர் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தினார். ஆம்; பொனான்னோ க்ரைம் குடும்பத்துக்கு தொடர்ந்து 35 வருடங்கள் இவர்தான் பாஸ்!

ஜோசப்பின் காலத்தில்தான் இத்தாலிய க்ரைம் சாம்ராஜ்யம் ப்ரூக்லினில் இருந்து கலிபோர்னியா வரை விரிவடைந்தது. ஜோசப் பொனான்னோ பெயரைச் சொன்னாலே போதும் நியூயார்க் மட்டுமல்ல, அமெரிக்காவே அலறும். மாரடைப்பு காரணமாக க்ரைம் பாஸ் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற ஜோசப், எழுத்தாளராக அவதாரம் எடுத்தார். ‘A Man of Honor: The Autobiography of Joseph Bonanno’ என்ற இவரது சுயசரிதை வெகு பிரபலம். 97 வயதில் மரணமடைந்தார்.

*விதிகள்

வேறு எதையும்விட க்ரைம் குடும்பம்தான் உறுப்பினர்களுக்கு மிக முக்கியமானது. மனைவிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அடுத்தவரின் மனைவியை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. காவல்துறையுடன் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது. கிளப் மற்றும் பப்களுக்குச் செல்லக்கூடாது. கடமை என்று வரும்போது ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது. மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட பாஸ் சொன்ன வேலையைத்தான் முதலில் செய்ய வேண்டும். எந்த தகவல் என்றாலும் அது உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாயைத் திறக்கக்கூடாது.

*இன்று

ஜோசப் பொனான்னோவிற்குப் பிறகு பிலிப் ராஸ்டெல்லி, ஜோசப் மாஸினோ உட்பட ஐந்துக்கும் மேலான பாஸ்கள் க்ரைம் குடும்பத்தை வழி நடத்தினார்கள். இவர்களது நிழல் உலக பிசினஸ் இன்றும் உலகம் முழுவதும் ரகசியமாக அரங்கேறி வருகிறது. 2004ல் அண்டர் பாஸாக இருந்து 2013ல் பாஸாக பதவி உயர்வு பெற்ற மைக்கேல் மன்காஸோதான், இன்று பொனோன்னோ க்ரைம் குடும்பத்தின் பாஸ். பலமுறை சிறைக்குச் சென்று திரும்பியவர் இவர்.

திரைப்படங்களும் புத்தகங்களும்

க்ரைம் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள் எல்லாமே ரகசியம். அவர்களது வீடு, சொத்து என்று எதுவுமே வெளியில் அவ்வளவாகத் தெரியாது. அதனால் பொனான்னோ உட்பட ஐந்து குடும்பங்களைப் பற்றி குறைந்த அளவே திரைப்படங்களும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன. இந்தக் குடும்பங்களைப் பின்னணியாக வைத்து மரியோ பூஸோ எழுதிய ‘த காட்ஃபாதர்’ நாவலும், அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உலகப்புகழ்பெற்றவை.

தவிர, ‘Bonanno: A Godfather’s Story’ என்ற தொலைக்காட்சிப் படமும், ‘Donnie Brasco’ என்ற ஹாலிவுட் படமும், ‘Fear City: New York vs The Mafia’ என்ற வெப்சீரிஸும் முக்கியமானவை. ‘King of the Godfathers’, ‘Five Families: The Rise, Decline, and Resurgence of America’s Most Powerful Mafia Empires’, ‘The Last Godfather: The Rise and Fall of Joey Massino’ போன்ற புத்தகங்கள் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டுள்ளன.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : The God Father , family Tree - ‘The God Father’
× RELATED Family Tree- 250 ஆண்டுகளாக உலகின் பணக்காரக் குடும்பம்!