×

ரூ.1000 கோடி செலவில் உருவான புதிய பாதை: ரயில்கள் இயக்கமின்றி காற்று வாங்கும் சேலம்-கரூர் வழித்தடம்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் பேரில் ரூ.1000 கோடி செலவில் உருவான சேலம்-கரூர் அகல ரயில்பாதை வழித்தடத்தில் அதிகப்படியான ரயில்கள் இயக்கப்படாததால், காற்று வாங்குகிறது. இன்றைய சூழலில் பெயரளவிற்கு எங்கும் நிற்காத மதுரை துரந்தோ ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருவது பயணிகளை வேதனையடைய செய்துள்ளது.

தமிழக ரயில்வே வழித்தடங்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களையும், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சேலம்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதையை ஏற்படுத்த வேண்டும் என 1975ம் ஆண்டுகளில் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சேலம்-கரூர் அகல ரயில்பாதை (85 கி.மீ., தூரம்) திட்டத்தை பற்றி மத்திய அரசிடம் தமிழக எம்பிக்களும் அப்போது முன்னெடுத்துச் சென்றனர். இதன்பயனாக 1986ம் ஆண்டில், சேலம்-கரூர் அகல ரயில்பாதை அமைக்க சர்வே பணி தொடங்கியது. 1988ல் திட்டத்தை தொடங்க ரூ.136 கோடி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.

பின்னர், 10 ஆண்டுகள் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1998ல் மத்திய ரயில்வே அமைச்சராக நிதிஷ்குமார் இருந்தபோது, ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மீண்டும் பணிகள் தொடங்கியது. பிறகு 2007ம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் புதிதாக உருவானதும், சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற ரூ.630 கோடி செலவாகும் என தீர்மானிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இறுதியாக 2012ம் ஆண்டு ரூ.750 கோடி செலவில் திட்டம் நிறைவு பெற்றது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததையடுத்து, 2013ம் ஆண்டு மே மாதம், சேலம்-கரூர் இடையே முதல் ரயிலாக பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.இந்த வழித்தடத்தை சென்னை-திருச்சி-மதுரை மார்க்கத்தை போல் மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக சென்னை-சேலம்-நாமக்கல்-கரூர்-மதுரை வழியே அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வருங்காலத்தில் நிறைவேற்றலாம் என்ற அடிப்படையில், சேலம்-கரூர் வழித்தடத்தை மின்வழிப்பாதையாக சமீபத்தில் மாற்றினர். இதுவரை சேலம்-கரூர் பாதைக்காக சுமார் ரூ.1000 கோடியை அரசு செலவிட்டுள்ளது. இப்படி பல இன்னல்களை சந்தித்து உருவான சேலம்-கரூர் வழித்தடம், எவ்வித முன்னேற்றமும் இன்றி, பயனற்றதாகவே தற்போது வரை இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு மே மாதம், சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் முதல் ரயிலாக இயக்கப்பட்ட நிலையில், இவ்வழித்தடத்தில் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை துரந்தோ, சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், சேலம்-திருச்சி பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டுள்ளது.

அதிலும், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒரே ஒரு சிறப்பு ரயிலாக இடையில் எங்கும் நிற்காத சென்னை-மதுரை துரந்ரோ ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலால் ராசிபுரம், நாமக்கல், கரூர் பயணிகளுக்கு எந்த பலனும் இல்லை. ஏற்கனவே இயங்கிய சேலம்-கரூர் பாசஞ்சர், சேலம்-திருச்சி பாசஞ்சர், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரசும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதில், குறைந்தது 5 ரயில்களையாவது சேலம், நாமக்கல், கரூர் வழியே தென் மாவட்டங்களுக்கு இயக்கினால், வட மாவட்ட பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். இக்கோரிக்கையை தொடர்ந்து மக்கள், முன்னெடுத்துச் சென்றும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சேலம்-கரூர் வழித்தடம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டதோ, அதை நிறைவேற்ற கடந்த 7 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி சேலம், நாமக்கல் மாவட்ட பயணிகள் கூறுகையில், “சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மதுரை மற்றும் திருச்சிக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. பஸ்களை நம்பி தான், இதுநாள் வரை பயணிக்கிறோம். அதனால், சேலத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் திருச்சி, மயிலாடுதுறைக்கு கரூர் வழியே புதிதாக ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து திருச்சி மார்க்கம் வழியே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களில், சிலவற்றை மட்டுமாவது சேலம்-நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் திருப்பி விட வேண்டும். இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், தெற்கு ரயில்வே  அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். அதனால், இனியாவது இவ்வழித்தடத்தை பயன்படுத்தும் வகையில் அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும்,’’ என்றனர்.

அடுத்த வாரத்தில் ஒரு ரயில் வருகிறது

சேலம்-கரூர் வழித்தடத்தை பயன்படுத்தும் வகையில், நாகர்கோவில்-மும்பை சிறப்பு ரயில், டிசம்பர் முதல் வாரத்தில் இயக்கத்திற்கு வருகிறது. வாரத்திற்கு 4 நாட்கள் இயங்கும் இந்த ரயில், நாமக்கல்லில் நின்று செல்லும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே, ஏதோ ஒரு ரயிலாவது கிடைத்ததே என்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem-Karur ,route , Salem, Karur, Rail
× RELATED நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்...