அரசின் கவனத்தை ஈர்க்க வட்டமலை அணையில் 10008 விளக்குகளை ஏற்றிய விவசாயிகள்

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணைக்கு பி.ஏ.பி திட்டத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டி, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வட்டமலை தடுப்பணையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10008 கார்த்திகை விளக்குகளை ஏற்றினர். வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரையை தடுத்து 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அணையின் மூலம், வெள்ளகோவில், புதுப்பை, தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்து 50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக அணைக்கு போதிய தண்ணீர் வரததால் அணை திறக்கவில்லை. அமராவதி அணையின் உபரி நீரை இவ்வணைக்கு கொண்டு வர 20 கி.மீ தூரம் கால்வாய் வெட்ட அரசாணை வெளியிடப்பட்டு ஆய்வு பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அணையை சுற்றி உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பொய்த்து போய் கால்நடைகளுக்கு கூட பணம் கொடுத்து குடி நீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பி.ஏ.பி தொகுப்பணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திருமூர்த்தி அணையின் மூலம் பி.ஏ.பி கால்வாயில் கள்ளிபாளையம் ரெகுலேட்டர் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இரு முறை இப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.ஆனால் அணைக்கு தண்ணீர் விட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசுக்கு கவன ஈர்ப்பும் வகையில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களால் அணைப்பகுதியில் 10008 தீபங்களை ஏற்றினர். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது தண்ணீர் மட்டுமே. எனவே அணையைக் காக்க வாரீர்!! என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: