×

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: சாரல் மழையில் படகு சவாரி

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் இரண்டாவது நாளாக நேற்றும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் ஏரியில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனிடையே, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 2021ம் ஆண்டு மலர் கண்காட்சிக்கு தயாராகும் வகையில், மலர் செடிகள் நடும் பணி நேற்று தொடங்கியது. சுமார் ஒரு கோடி மலர்கள் பூக்கும் வண்ணம் செடிகள் நடப்பட்டு வருகின்றன.

பூங்கா மேலாளர் சிவபாலன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் சீசன் காலத்தில் நடைபெறக்கூடிய மலர் கண்காட்சி விழாவில் கண்டு ரசிக்க கூடிய வகையில் முதற்கட்ட மலர்ச்செடிகள் நடும் பணி தொடங்கியுள்ளது. டெல் பிளைம், சால்வியா, பிங்க் ஆஸ்டர், அஷ்டமரியா, வெர்பினியா, ஆர்னத்தி கேலம், லில்லியம் போன்ற ஆறு மாதத்தில் பூக்கக் கூடிய ரக செடிகள் முதற்கட்டமாக நடப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்படுகின்றன. இரண்டாம் கட்ட நடவு ஜனவரி மாதத்திலும், மூன்றாம் கட்ட நடவு பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும். சுமார் ஒரு கோடி மலர்கள் பூக்கும் வண்ணம் செடிகள் நடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மலைச்சாலையில் நேற்று முன்தினம் ராட்சத பாறை சரிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று ஏரி சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஏரி சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, நடைபயிற்சி செய்து வழக்கம். அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்த நேரத்தில் யாரும் அப்பகுதியில் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அரசுத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதன்பிறகு போக்குவரத்து சீரானது.

Tags : Kodaikanal , Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...