×

10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் அருகே கிபி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூரில் திருமேனிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் மகாமண்டபம் கட்டும்பணிக்காக, சேதமடைந்த கற்கள், தூண்கள் அகற்றப்பட்டு, கோயில் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் இப்பகுதியில் ஆய்வு செய்தபோது, கிபி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து இந்நிறுவன தலைவர் ராஜகுரு கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனந்தூர் சிவன் கோயிலுக்குத் தெற்கே குளக்கரையில், சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், கோயில் தூண்கள் கிடந்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருங்கல்லினால் ஆன இச்சிற்பம் 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் கீழே பீடத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கிபி 10ம் நூற்றாண்டாகக் கருதலாம். வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்திருக்கிறது. கிபி 10ம் நூற்றாண்டளவில் இவ்வூரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனத் தெரிகிறது’’ என்றார்.

Tags : Mahavira , Mahavira, sculpture
× RELATED வஉசி பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் நன்கொடை செலுத்த கியூஆர் கோடு அறிமுகம்