கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் கூறிய சென்னை தன்னார்வலர் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர சீரம் நிறுவனம் முடிவு

மும்பை : கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் கூறிய தன்னார்வலர் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர சீரம் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் நடத்துகிறது. தமிழகத்தில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு, இந்த பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் இது தொடர்பாக ஐசிஎம்ஆர், சீரம் நிறுவனம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக நிபுணர் குழு, சோதனையை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி புகார் தெரிவித்தார். மேலும், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்குவதோடு மற்றவர்களும் இதே போல பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பு மருந்து சோதனையை நிறுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்தப்பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தன்னார்வலரின் உடல் பிரச்சனைகளுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. கோவிஷீல்டு பற்றி தவறான தகவல்களை பரப்பியதால் தன்னார்வலர் மீது ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு பி[பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை உடனடியாக பயன்படுத்துவதற்கான அனுமதி பெற 2 வாரங்களில் விண்ணப்பிக்க சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: