ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம்?: 38 மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனையில் முடிவு என தகவல்..!

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த கொரோனா காலத்தில் மேலும் தடைப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம், ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியானது. ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறி போனது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தற்போது கட்சித் தொடங்கலாமா என்பது குறித்து மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இதனையடுத்து, ஜனவரி மாதத்தில் கட்சித் தொடங்க உள்ளதாகவும், முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த் தான் போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இன்று நண்பகல் அறிக்கை வாயிலாக தனது நிலைப்பாட்டை ரஜினி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: