மாமல்லபுரம் பகுதிகளில் கனமழையால் 7 ஏரிகள் நிரம்பின

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த பலத்த மழையால் 7 ஏரிகள் நிரம்பின. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் குறுவட்ட எல்லைக்கு உட்பட்ட கடம்பாடி, பெருமாளேரி, நல்லூர், நத்தம், கரியச்சேரி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் உள்ளிட்ட பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் நிரப்பினால், சுற்று வட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும், இந்த ஏரிகள் தண்ணீரால் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், கால்நடைகளுக்கு தண்ணீர் இன்றி தவித்தன.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததால் மாவட்டத்தில் பல ஏரிகள் தண்ணீரின்றி வரண்டு காணப்பட்டது. இதனால், விவசாயம் செய்யாமல் தவித்து வந்தோம். மேலும், கடைகளில் அதிக விலை கொடுத்து அரிசி வாங்கி பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில், மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால், ஒரு சில ஏரிகளில் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இந்தாண்டு விவசாயம் செய்ய போதிய மழை பெய்ததால் மகிழ்ச்சியுடன் மூன்று போகம் பயிர் செய்வோம்” என்றனர்.

Related Stories: