அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்

ஹூஸ்டன்: உலகின் மிகச்சிறிய மெமரி சிப் சாதனத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான மிக விரைவான, சிறிய, அதிதிறன் வாய்ந்த மெமரி சாதனங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. கணினி, மொபைல் போன்களில் தரவுகளை சேமிக்கும் மெமரி சிப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நானோ தொழில்நுட்பத்தின் கீழ் மெமரி சிப்கள் குறித்து புதுப்புது கண்டுபிடிப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ‘நேச்சர் நானோடெக்னாலஜி’ இதழில் அமெரிக்க விஞ்ஞானிகளின் மிக முக்கிய ஆய்வு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஓர் கண்டுபிடிப்பின் அடிப்படையில் உலகின் மிகச்சிறிய மெமரி சிப் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். இதன் குறுக்கு வெட்டு பகுதி வெறும் ஒரு சதுர நானோமீட்டராகும். இந்த சாதனம் மெமரிஸ்டர்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மெமரிஸ்டர், சதுர சென்டிமீட்டருக்கு சுமார் 25 டெராபைட் சேமிப்பு திறன் கொண்டதாகும். இது தற்போது வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பிளாஷ் மெமரி சாதனங்களுடன் ஒப்பிடும்போது 100 மடங்கு அதிக சேமிப்பு திறன் கொண்டது. இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் மனித கட்டளையின்றி தாமாக இயங்கக் கூடிய சாதனங்களுக்கான மிகச்சிறிய மெமரி சிப்களை உருவாக்க வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* இந்த மிகச்சிறிய சிப்களை கொண்டு, இன்னும் சிறிய கணினிகள் மற்றும் தொலைபேசிகளை உருவாக்கலாம்.

* சிப்களின் அளவை சுருக்குவதன் மூலம் அவற்றின் ஆற்றல் தேவை குறைந்து, திறன் அதிகரிக்கும்.

* அதாவது வேகமான, சிறந்த சாதனங்கள் செயல்பட குறைந்த மின்சக்தியே போதுமானதாக இருக்கும்.

Related Stories:

>