×

மீண்டும் சதமடித்தார் ஸ்மித் 2வது போட்டியிலும் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா: இந்தியா ஏமாற்றம்

சிட்னி: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் வார்னர்  கேப்டன் பிஞ்ச் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 142 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். பிஞ்ச் 60 ரன் (69 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் கோஹ்லி வசம் பிடிபட்டார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் 83 ரன் (77 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். இதையடுத்து, ஸ்மித் லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. ஸ்மித் தொடர்ச்சியாக 2வது சதம் விளாசி முத்திரை பதித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்தது. ஸ்மித் 104 ரன் (64 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்திக் பந்துவீச்சில் ஷமி வசம் பிடிபட்டார்.

அதன் பிறகும் ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் விழி பிதுங்கினர். லாபுஷேன், மேக்ஸ்வெல் இருவரும் தங்கள் பங்குக்கு அரை சதம் அடித்து மிரட்டினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. லாபுஷேன் 70 ரன் (61 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பூம்ரா வேகத்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன் குவித்தது. மேக்ஸ்வெல் 63 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷமி, பூம்ரா, ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 390 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மயாங்க், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 7.4 ஓவரில் 58 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. தவான் 30 ரன், மயாங்க் 28 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 60/2 என இந்தியா சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கேப்டன் கோஹ்லி ஷ்ரேயாஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தப் போராடினர்.

இருவரும் 3வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த நிலையில், ஷ்ரேயாஸ் 38 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கோஹ்லி ராகுல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 72 ரன் சேர்த்தது. சதத்தை நெருங்கிய நிலையில், கோஹ்லி 89 ரன் எடுத்து (87 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹேசல்வுட் வேகத்தில் ஹென்ரிக்சின் அதியற்புதமான கேட்சில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்த ராகுல் 76 ரன் எடுத்து (66 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) ஸம்பா சுழலில் வெளியேற, இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஜடேஜா 24 ரன், ஹர்திக் 28 ரன் விளாசி கம்மின்ஸ் வேகத்தில் அடுத்தடுத்து நடையை கட்ட இந்திய அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஷமி 1 ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். பூம்ரா டக் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன் எடுத்து, 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சைனி 10 ரன், சாஹல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, ஹேசல்வுட், ஸம்பா தலா 2, ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிச. 2ம் தேதி நடக்கிறது.

* கோஹ்லி 22,000!
தனது 250வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கிய இந்திய அணி கேப்டன் கோஹ்லி சர்வதேச போட்டிகளில் 22,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை நேற்று கடந்தார். அவர் இதுவரை 250 ஒருநாள் போட்டியில் 11,977 ரன், 86 டெஸ்டில் 7240 ரன், 82 டி20ல் 2794 ரன் என மொத்தம் 22,011 ரன் எடுத்துள்ளார்.
* இந்திய அணி தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
* பீல்டிங்கின் போது காயம் அடைந்த வார்னருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
* நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2வது சதம் விளாசிய ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

* தோற்றது இந்தியா... ஜெயித்தார் இந்தியர்!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அந்த வகையில், நேற்று இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடந்த சிட்னி மைதானம் இந்தியர் ஒருவருக்கு சொர்க்கமானது. ஆம், மைதானத்தில் போட்டியின் நடுவே கேலரியில் இந்தியர் ஒருவர் தனது ஆஸி. காதலியிடம் காதலை கூறினார். அதற்கு அடையாளமாக நம்மவர், காதல் பரிசாக மோதிரத்தை எடுத்து நீட்ட, ஒட்டுமொத்த அரங்கமும் காதலியின் பதிலுக்காக காத்திருந்தது. அந்த காதலி காதலுக்கு ஓகே சொல்ல, இந்திய வாலிபருடன் சேர்ந்து அனைவருமே சந்தோஷமடைந்தனர். காதலி ஆனந்த கண்ணீருடன் காதலரை கட்டி அணைத்து முத்தமிட்டார். மைதானத்தில் இருந்தபடி மேக்ஸ்வெல் கைத்தட்டி தனது வாழ்த்தை தெரிவித்தார். கமென்ட்ரி அறையில் இருந்த கில்கிறிஸ்ட் உள்ளிட்டோரும் காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் வீடியோவில் வைரலாகின.

Tags : Smith ,Australia ,India , Smith scores again in 2nd match Australia wins 2nd series Australia: India disappointed
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை