சாகர்மாலா திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு மீன்வளத்துறையை அமைச்சர் கவனிக்காததால் மீனவர்கள் பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சேதுபாவாசத்திரம்: மீன்வளத்துறை அமைச்சர், அவர் துறையை கவனிக்காததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சிக்காக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி.பாலசுப்பிரமணியன் தலைமையில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துமாணிக்கம் முன்னிலையில் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செந்தலைப்பட்டினத்தில் நடந்த மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது: நான் மட்டும் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தினசரி கைது செய்து, உத்வேகத்தை கொடுத்தது இந்த அடிமை அதிமுக ஆட்சிதான். மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எப்போதும் துணைநிற்பது திமுக தான். மீனவர்களுக்கு தீங்குவிளைவிக்கும் சாகர்மாலா திட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவர் துறையை சரியாக கவனிக்காததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜ எதை சொன்னாலும் அதற்கு அடிமையாக உள்ள அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் திமுக ஆட்சி அமைய உள்ளது. உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கோவேந்தன் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது குடும்பத்தாரை சந்தித்தார். அதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் வழியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு சென்றார்.

Related Stories: