எப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி ஐதராபாத் மேயர் பதவியை பாஜ கைப்பற்றும்: பிரசாரத்தில் அமித்ஷா திட்டவட்டம்

ஐதராபாத்: ‘ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், பாஜ மேயரைத் தான் மக்கள் இம்முறை தேர்ந்தெடுப்பார்கள்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் வரும் 1ம் தேதி நடக்க உள்ளது. எப்போதும் இல்லாத வகையில், இம்முறை இந்த மாநகராட்சியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜ தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இங்கு பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக ஐதராபாத் சென்ற அமித்ஷா பிரசித்தி பெற்ற பாக்யலட்சுமி தேவி கோயிலில் வழிபட்டு, செகந்திராபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது, தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜ.வை ஆதரித்த தெலங்கானா மக்கள், 4 தொகுதிகளில் பாஜ.வுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

அதிலிருந்து மாற்றம் தொடங்கியதாகவே நான் கருதுகிறேன். அதன் அடுத்த நகர்வுதான், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல். ஐதராபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உள்ளாட்சி நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. அடிப்படை வசதிகள் ஏதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி-ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணி மீது மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். எனவே, ஐதராபாத் மேயர் பதவியை இந்நகர மக்கள் இம்முறை பாஜ.வுக்கே தருவார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தால் நிசாம் கலாச்சாரத்தில் இருந்து ஐதராபாத்துக்கு விடுதலை பெற்று தருவோம். பாஜ வென்ற எந்த இடத்திலும் மதக்கலவரங்கள் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

திடீர் முக்கியத்துவம் ஏன்?

மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களுக்கு இணையாக, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்து பாஜ மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதால், பாஜ திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், இத்தேர்தல் தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories: