பெயர் குறிப்பிடாத மத்திய ஆசிய நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த 50 இந்திய விஞ்ஞானிகள் மீட்பு: பலருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி: மத்திய ஆசிய நாடு ஒன்றில் சிக்கியிருந்த 50 இந்திய விஞ்ஞானிகளை விமானப்படை தனது ரகசிய பயணத்தின் மூலம் பத்திரமாக மீட்டு வந்துள்ளது. இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமானம், ரயில் உட்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தவித்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள், பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டனர். தற்்போது, ஊரடங்கு தளர்வின் ஒரு கட்டமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களும் இயக்கப்படுவதால், வெளிநாடுகளில் சிக்கியவர்களை அழைத்து வரும் சிறப்பு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெயர் குறிப்பிடப்படாத மத்திய ஆசிய குடியரசு நாடு ஒன்றில், இந்திய விஞ்ஞானிகள் 50 பேர் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இவர்கள், இந்த ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டு இருந்தனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசுக்கு சமீபத்தில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இவர்களை ரகசியமாக மீட்டு வருவதற்கான பணி, விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங், இதற்காக சிறப்பு திட்டத்தை வகுத்து கொடுத்தார். அதன்படி, இந்திய விமானப்படையின் பிரமாண்ட சரக்கு போக்குவரத்து விமானமான ‘சி 17 குளோப்மாஸ்டர்’, அந்த நாட்டுக்கு அனுப்ப  முடிவு செய்யப்பட்டது. விஞ்ஞானிகளில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததால், விமானத்தில் அவர்களை தனிப்படுத்தவும், மற்றவர்களை வைரஸ் தாக்காமல் பாதுகாக்கவும் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இந்த விமானம் தனது ரகசிய பயணத்தை தொடங்கியது. குறிப்பிட்ட அந்த நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்த 50 விஞ்ஞானிகளும், தகுந்த கொரோனா வழிகாட்டு தற்காப்புகளுடன் விமானத்தில் ஏற்பட்டனர். அந்த இடத்தில் விமானம் 2 மணி நேரம் மட்டுமே நின்றது. விஞ்ஞானிகள் ஏறியும் மீண்டும் அது பயணத்தை இந்தியாவை நோக்கி தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில், குறிப்பிட்ட ஒரு தளத்தில் இறங்கியது. விஞ்ஞானிகள் இறக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள் அனைத்தும் 20 மணி நேரத்தில் முடிந்தது.

Related Stories:

>