ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமங்களில் பீதி பதுங்கு குழிகளில் பதுங்கி இரவை கழிக்கும் மக்கள்: வீடுகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குவதால் அச்சம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் சமீபகாலமாக தாக்குதல் நடத்துவது அதிகமாகி விட்டதால், இங்குள்ள மக்கள் இரவு நேரங்களில் பதுங்கு குழிகளில் பதுங்கி உயிரை காத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சர்வதேச எல்லை பகுதிகள், எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சமீப காலமாக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய ராணுவ முகாம்கள், எல்லையோர கிராமங்கள் குறிவைக்கப்படுகின்றன.

இதேபோல், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியது. பன்சார், மன்யாரி மற்றும் கரோல்  கிருஷ்ணா பகுதிகளில் எல்லையோர கிராமங்கள், வீரர்களின் நிலைகளை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு  9.50 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச்சூடு அதிகாலை 4.15 மணி வரை நீடித்தது.  இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.  பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை.

பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீர் எல்லையில் சமீப நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இரவு நேரங்களில் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்கி கொள்கின்றனர். எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இதை தவிர வேறுவழியில்லை என்று அவர்கள் வேதனையுடன்  தெரிவித்துள்ளனர்.

உளவு பார்த்த டிரோன்

நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக மாலையில், ஜம்மு  மாவட்டத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் டிரோன்  உளவு பார்ப்பதற்காக பறந்துள்ளது. இதை பார்த்து உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், டிரோனை சுட முயன்றனர். வீரர்கள் தாக்க தொடங்கியதும், அந்த டிரோன் மீண்டும் பாகிஸ்தானுக்குள் சென்று விட்டது.

Related Stories: